ADVERTISEMENT

நடுவானில் உயிருக்குப் போராடிய எதிஹாட் பணியாளரை காப்பாற்றிய 2 தமிழக மருத்துவர்கள்!! குவியும் பாராட்டு.!!

Published: 11 Dec 2025, 7:13 PM |
Updated: 11 Dec 2025, 7:14 PM |
Posted By: Menaka

எதிஹாட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த இரண்டு தமிழ் மருத்துவர்கள், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான ஒவ்வாமை அதிர்ச்சியால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு விமானப் பணியாளரைக் காப்பாற்றிய சம்பவத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

ADVERTISEMENT

இந்தச் சம்பவம் டிசம்பர் 1 அன்று, விமானம் எத்தியோப்பியாவிலிருந்து இந்தியாவிற்குப் புறப்பட்ட சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சென்னை MGM ஹெல்த்கேரைச் சேர்ந்த ரத்தவியல் புற்றுநோய் நிபுணரும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கோபிநாதன் எம் மற்றும் மூத்த ஆலோசகரும் சிறுநீரக மருத்துவப் பிரிவுத் தலைவருமான டாக்டர் சுதர்ஷன் பாலாஜி ஆகிய இருவரும் ஒரு மருத்துவ முகாமில் கலந்துகொண்டு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த அவசரநிலை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

எம்ஜிஎம் ஹெல்த்கேரின் கூற்றுப்படி, அந்த விமானப் பணியாளர் கடுமையான அனாஃபிலாக்ஸிஸ் எனப்படும் உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது சுவாசப் பாதையை விரைவாக அடைத்துவிடும் எனக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், அவருக்கு சுவாசம் முற்றிலும் நின்றுவிட்டதாகவும், விமானம் சுமார் 30,000 அடி உயரத்தில் பறக்கும்போது அவரது ஆக்ஸிஜன் அளவு 80 சதவீதமாகக் குறைந்ததால், நடுவானில் வாழ்வா சாவா என்ற ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

ADVERTISEMENT

அதேசமயம், விமானத்தில் அடிப்படை மருத்துவப் பொருட்கள் மட்டுமே இருந்ததாலும், அவசரமாகத் தரையிறங்க வாய்ப்பு இல்லாததாலும், இரண்டு மருத்துவர்களும் உடனடியாகச் செயல்பட்டு ஸ்டீராய்டுகள், மூச்சுக்குழாய் விரிவூக்கிகள் மற்றும் ஆன்டிஹிஸ்டமின்களை வழங்கி, அந்தப் பணியாளருக்குத் தொடர்ச்சியாக ஆக்ஸிஜன் அளித்ததாக கூறப்படுகிறது.

அதாவது இந்த இரண்டு நிபுணர்களும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் செலவிட்டு அவரது சுவாசத்தை சீராக்கியுள்ளனர். இந்த மருத்துவ அவசரநிலை (எத்தியோப்பிய நேரப்படி) பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை நீடித்ததாகவும், விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கும் வரை, நான்கு மணி நேர விமானப் பயணம் முழுவதும் அவரது முக்கிய உடல்நிலைகளைக் கண்காணித்து, அவர் சுயநினைவுடனும் சீரான நிலையிலும் இருப்பதை அவர்கள் உறுதி செய்ததாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து MGM ஹெல்த்கேர், மருத்துவர்களின் இந்தச் செயல்களைப் பாராட்டியதுடன், நடுவானில் நடந்த இந்த உயிர் மீட்புப் பணியை, மருத்துவமனைக்கு அப்பாற்பட்ட ஒரு சூழலில் மருத்துவத்துறை அர்ப்பணிப்பின் ஒரு முக்கியமான உதாரணம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel