2026 புத்தாண்டை வரவேற்க டவுன்டவுன் துபாயில் பெரும் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், புர்ஜ் கலிஃபாவைச் சுற்றியுள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான விரிவான போக்குவரத்து மற்றும் பொதுப் போக்குவரத்துத் திட்டத்தை துபாய் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
உலகின் மிக உயரமான கட்டிடத்தில் நடைபெறும் இந்த வருடாந்திர கொண்டாட்டங்கள், உலகளவில் மிகப்பெரிய புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும். இங்கு நடத்தப்படும் வாணவேடிக்கை மற்றும் ஒளிக்காட்சி லட்சக்கணக்கான குடியிருப்பாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது.
இந்த கொண்டாட்டத்தின் போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும், டவுன்டவுன் துபாய்க்குச் செல்லும் முக்கிய சாலைகள் புதன்கிழமை, டிசம்பர் 31, 2025 அன்று மாலை 4 மணி முதல் ஒவ்வொரு கட்டமாக மூடப்படும் என்றும், இந்தத் தடைகள் ஜனவரி 1, 2026 அதிகாலை வரை தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகவே, பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறும், டவுன்டவுன் பகுதிக்குள் வாகனங்களில் வருவதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மெட்ரோ நிலையம் மூடல் மற்றும் நீட்டிக்கப்பட்ட சேவைகள்
புர்ஜ் கலிஃபா/துபாய் மால் மெட்ரோ நிலையம் மாலை 5 மணி முதல், அல்லது அதிகபட்ச கொள்ளளவை எட்டினால் அதற்கு முன்னதாகவே மூடப்படும் என்று RTA அறிவித்துள்ளது. எனவே, கொண்டாட்டங்களுக்குச் செல்லும் பார்வையாளர்கள் அருகிலுள்ள நிலையங்களைப் பயன்படுத்தி, முடிந்தவரை நிகழ்விடத்திற்கு நடந்து செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அருகிலுள்ள மாற்று நிலையங்கள் ஃபைனான்சியல் சென்டர் மற்றும் பிசினஸ் பே ஆகும்.
மேலும், பொதுப் போக்குவரத்திற்கான தேவையில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, ரெட் மற்றும் க்ரீன் மெட்ரோ வழித்தடங்கள் டிசம்பர் 31, 2025 அன்று அதிகாலை 5 மணி முதல் ஜனவரி 1, 2026 அன்று இரவு 11.59 மணி வரை என 43 மணி நேரம் தொடர்ச்சியாக இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், துபாய் டிராமும் டிசம்பர் 31 அன்று காலை 6 மணி முதல் ஜனவரி 2, 2026 அன்று அதிகாலை 1 மணி வரை 43 மணி நேரம் இடைவிடாமல் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பார்க்கிங் வசதியுடன் கூடிய மெட்ரோ நிலையங்கள்
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் பின்வரும் மெட்ரோ நிலையங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்தலாம்:
- சென்டர்பாயிண்ட் நிலையம்
- இ& நிலையம்
- நேஷனல் பெயிண்ட்ஸ் நிலையம் (ஜெபல் அலி)
- ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்ஸ் நிலையம்
பயணிகள் பயணம் செய்வதற்கு முன் தங்கள் நோல் கார்டு இருப்பைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பாதசாரி மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை மூடல்கள்
பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, துபாய் க்ரீக் முழுவதும் உள்ள அனைத்து பாதசாரி மேம்பாலங்களும் லிஃப்ட்களும் மாலை 4 மணி முதல் மூடப்படும். இவற்றில் பின்வருவன அடங்கும்:
- துபாய் க்ரீக் ஹார்பர் பாதசாரி பாலம்
- பர் துபாய் மற்றும் தேராவை இணைக்கும் இன்ஃபினிட்டி பாலம்
- தேரா மற்றும் பர் துபாயை இணைக்கும் ஷிந்தகா பாதசாரி சுரங்கப்பாதை
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சீரான போக்குவரத்து, கூட்டக் கட்டுப்பாடு மற்றும் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் அவசியம் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel