ADVERTISEMENT

துபாய் இன்டர்நேஷனல் சிட்டி பார்க்கிங்கில் மாற்றம்.. விரைவில் நடைமுறைக்கு வரும் பார்க்கிங் கட்டணம்..!!

Published: 31 Dec 2025, 8:37 AM |
Updated: 31 Dec 2025, 8:37 AM |
Posted By: Menaka

துபாய் இன்டர்நேஷனல் சிட்டியில் வசிப்பவர்கள் வருகின்ற பிப்ரவரி 1, 2026 முதல் பொது பார்க்கிங்கிற்கு கட்டணம் செலுத்தத் தொடங்க வேண்டும் என்று அப்பகுதி உள்ளூர் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் பார்க்கிங் இலவசமாக இருந்த கடைசி பெரிய குடியிருப்புப் பகுதிகளில் இன்டர்நேஷனல் சிட்டியும் ஒன்றாகும்.

ADVERTISEMENT

அந்தப் பகுதியில் பார்க்கிங் மீட்டர்கள் இன்னும் நிறுவப்படாத நிலையில், பிரான்ஸ் மற்றும் சீனா கிளஸ்டர்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் கட்டண பார்க்கிங் குறித்த அறிவிப்புப் பலகைகள் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகள், இன்டர்நேஷனல் சிட்டியில் பார்க்கிங் கோட் Q-இன் கீழ் வரும் என்றும், கட்டணங்கள் தினமும் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பொருந்தும் என்றும் குறிப்பிடுகின்றன.

பார்க்கின் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, பார்க்கிங் கட்டணங்கள் 30 நிமிடங்களுக்கு 2 திர்ஹம் முதல் தொடங்கி, 16 மணி நேரத்திற்கு 25 திர்ஹம் வரை இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

துபாயின் இன்டர்நேஷனல் சிட்டியில் பார்க்கிங் நீண்ட காலமாக ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது, குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில், குடியிருப்பாளர்கள் வீட்டிற்குத் திரும்பும்போது இந்தச் சிக்கல் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வாடகை கார் நிறுவனங்கள் மற்றும் சிறிய சரக்கு லாரிகளை இயக்கும் வணிக நிறுவனங்கள், இப்பகுதியில் உள்ள ஒப்பீட்டளவில் மலிவான வாடகைச் செலவுகள் காரணமாக இப்பகுதியை அதிக அளவில் பயன்படுத்துவதால், இந்த நிலைமை மேலும் மோசமடைவதாகக் கூறப்படுகிறது.

ஆகவே, கட்டண பார்க்கிங் அறிமுகப்படுத்தப்பட்டால், போக்குவரத்து நெரிசல் குறைந்து, பார்க்கிங் இடங்களின் இருப்பு மேம்படும் என்று பல குடியிருப்பாளர்கள் நம்புகிறார்கள்.
“வேலையிலிருந்து தாமதமாகத் திரும்பும்போது பார்க்கிங் இடம் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது, கட்டண பார்க்கிங், குடியிருப்பாளர்களுக்கு இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய உதவும்.” என்று டெலிவரி துறையில் பணிபுரிபவர் ஒருவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் சில குடியிருப்பாளர்களுக்கு, பார்க்கிங் பிரச்சனைகள் ஏற்கனவே இடமாற்றத்திற்கு வழிவகுத்துள்ளன. பார்க்கிங் சிக்கள் காரணமாக இன்டர்நேஷனல் சிட்டியில் இருந்து அல் குசைஸுக்கு குடிபெயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் ஒருவர், தற்போது கட்டண பார்க்கிங் வரவிருப்பதால், பார்க்கிங் இருப்பு மேம்படும் என்பதால் மீண்டும் இங்கு குடியேறலாம் என்று திட்டமிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், துபாயின் முக்கிய கட்டணப் பொது பார்க்கிங் நிறுவனமான பார்க்கின், நகரம் முழுவதும் கட்டண பார்க்கிங் மண்டலங்களை சீராக விரிவுபடுத்தி வருகிறது. நவம்பரில், ஸ்டுடியோ சிட்டி மற்றும் அவுட்சோர்ஸ் சிட்டியில் இதேபோன்ற மண்டலங்களை அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே, இந்நிறுவனம் இன்டர்நேஷனல் அகாடமிக் சிட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் கட்டண பார்க்கிங்கை அறிமுகப்படுத்தியது. ஏப்ரல் 4, 2025 அன்று, பார்கின் துபாயின் மாறிவரும் பார்க்கிங் கட்டணக் கொள்கையையும் செயல்படுத்தியது, அதிக மக்கள் அடர்த்தி உள்ள பகுதிகளில் தேவையை சிறப்பாக நிர்வகிக்க நெரிசல் மற்றும் நெரிசல் இல்லாத நேரங்களுக்கு விலை நிர்ணயம் செய்தது.

இந்த நடவடிக்கை பார்க்கிங் வருவாயை மேம்படுத்துதல், நெரிசலைக் குறைத்தல் மற்றும் நகரம் முழுவதும் சீரான போக்குவரத்து ஓட்டத்தை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel