ADVERTISEMENT

UAE: இரண்டு நாட்களில் 127 மி.மீ மழை பதிவு.. வானிலை மையம் வெளியிட்ட தகவல்..!!

Published: 20 Dec 2025, 8:47 PM |
Updated: 20 Dec 2025, 8:49 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழைப் பொழிவு முடிவடைந்து விட்டாலும், குளிர்ந்த வெப்பநிலை மற்றும் அவ்வப்போது மழைத் தூறல் ஆகியவை வார இறுதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

அமீரகத்தின் தேசிய வானிலை மையம் (NCM) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வியாழக்கிழமை இரவு மற்றும் வெள்ளிக்கிழமை அன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல்வேறு தீவிரத்திலான மழை பெய்தது. குறிப்பாக, ராஸ் அல் கைமாவில் உள்ள அல் கஸ்லா பகுதியில் அதிகபட்சமாக 127 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர்த்து குறிப்பிடத்தக்க மழைப்பொழிவைப் பெற்ற மற்ற பகுதிகள் சக்ர் போர்ட் (123 மி.மீ), ஜபல் அல் ரஹ்பா (117.5 மி.மீ), ஜெபல் ஜெய்ஸ் (116.6 மி.மீ) மற்றும் ராஸ் அல் கைமா சிட்டி (72 மி.மீ) ஆகியவை அடங்கும்.

ADVERTISEMENT

அமீரகங்கள் முழுவதும் வானிலை சீராகி விட்டாலும், வார இறுதியில் வானிலை அவ்வப்போது ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பச்சலன மேகங்கள் உருவாகி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாடு முழுவதும் வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக NCM தெரிவித்துள்ளது. வார இறுதியில் பகல் நேரங்களில் வானிலை குளிர்ச்சியாகவும், இரவுகள் குளிராகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக உட்புற மற்றும் மலைப் பிரதேசங்களில் குளிர் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காற்றின் வேகம் அவ்வப்போது மிதமானது முதல் பலமாக வீசக்கூடும், குறிப்பாக வெப்பச்சலன மேகங்கள் உருவாகும்போது, ​​இது புழுதி மற்றும் மணலைத் தூக்கி, கிடைமட்டப் பார்வைத்திறனைக் குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் நிலைமைகளைப் பொறுத்தவரை, அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் ஆகிய இரண்டிலும் கடல் சீற்றமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel