ஷார்ஜாவின் ஆட்சியாளரும் மற்றும் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினருமான ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்கள், புதன்கிழமை அன்று மிலைஹா பால் பண்ணை மற்றும் தொழிற்சாலையைத் (Mleiha Dairy Farm and Factory) திறந்து வைத்துள்ளார். மேலும், இந்தத் திட்டம், தான் 65 ஆண்டுகளாகக் கொண்டிருந்த ஒரு கனவின் நிறைவேற்றம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 20,000 சதுர மீட்டர்கள் பரப்பளவைக் கொண்ட இந்த பால் தொழிற்சாலை சுமார் 600 டன் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது என்று அறிக்கைகள் கூறுகின்றன. மிலைஹா பகுதியில் அமைந்துள்ள இந்தப் பண்ணையின் திறப்பு விழாவின் போது, உலகின் மிகப்பெரிய A2A2 கால்நடைப் பண்ணை என்பதை அங்கீகரிக்கும் கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழை ஷேக் சுல்தான் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த பால் பண்ணை, வணிக லாபத்தை விட பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து, தற்சார்பை அடைவதை நோக்கமாகக் கொண்ட அமீரகத்தின் நீண்ட கால உணவுப் பாதுகாப்பு உத்தியின் ஒரு பகுதியாகும் என்று ஷார்ஜாவின் ஆட்சியாளர் கூறியுள்ளார்.
“எங்களுக்கு லாபம் வேண்டாம், மக்களுக்கு ஆரோக்கியம் வேண்டும்,” என்று கூறிய ஷேக் சுல்தான், தூய்மையான, சத்தான உணவை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது ஒரு தேசிய இலக்கு என்பதையும் வலியுறுத்தியிருக்கிறார்.
மேலும், ஷார்ஜாவின் அணுகுமுறை, பாலைவனச் சூழலுக்கு ஏற்ற இயற்கை மற்றும் பாரம்பரிய அடிப்படையிலான விவசாய முறைகளில் கவனம் செலுத்துகிறது என்று விளக்கமளித்த அவர், இந்த பண்ணையில் பயன்படுத்தப்படும் A2A2 கால்நடைகள் ஒரு அரிய, அசல் இனம் என்பதையும், இவை இயற்கை தீவன முறைகள் மற்றும் ஆரோக்கியமான பராமரிப்பு நடைமுறைகளைப் பயன்படுத்தி வளர்க்கப்படுகின்றன என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.
பால் பண்ணையைத் தவிர, ஆலிவ் சாகுபடி, கோழி வளர்ப்பு, காய்கறி உற்பத்தி, கோதுமை சாகுபடி மற்றும் மலை விவசாயம் ஆகியவற்றை உள்ளடக்கிய எமிரேட்டின் ஒரு பரந்த விவசாய தொலைநோக்குப் பார்வையையும் ஷேக் சுல்தான் கோடிட்டுக் காட்டினார்.
ஏற்கனவே ‘Jebel Deem’ மலையில், ஷார்ஜா 3,800 ஆலிவ் மரங்களை நட்டுள்ளது, மேலும் 1,200 மரங்கள் தற்போது நடப்பட்டு வருகின்றன. பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பிரத்யேக ஆலிவ் எண்ணெய் தொழிற்சாலைக்கான எதிர்காலத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் 1,500 புதிய மரங்கள் நடப்பட்டு இந்தத் திட்டம் தொடரும் என்று ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், கோழி வளர்ப்பு என்பது அமீரகத்தின் உணவுப் பாதுகாப்பு உத்தியின் மற்றொரு முக்கிய தூணாகும். ‘Feli birds’ திட்டத்தை முன்னிலைப்படுத்தி பேசிய ஷேக் சுல்தான், இத்திட்டத்தில் கோழிகள் திறந்தவெளிகளில் இயற்கை தீவனம் மற்றும் மருந்துகளுடன் வளர்க்கப்படுகின்றன. இந்த பறவைகள் முதிர்ச்சியடைய சுமார் மூன்று மாதங்கள் ஆகும். இது வணிக ரீதியான பண்ணை முறையை விட மெதுவான செயல்முறையாக இருந்தாலும், உணவுத் தரம் மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது என்பதை விவரித்துள்ளார்.
ஷார்ஜாவில் காய்கறி சாகுபடியும் இதே தத்துவத்தைப் பின்பற்றுகிறது. ஜெர்மனியில் உள்ள சிறப்புப் பண்ணைகளுடன் இணைந்து தூய்மையான, அசல் விதைகளிலிருந்து பயிர்கள் பயிரிடப்படுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்படாத இந்த விதைகள், அவற்றின் சுவை, மணம் மற்றும் ஊட்டச்சத்து மதிப்புக்கு பெயர் பெற்ற காய்கறிகளை உற்பத்தி செய்கின்றன. நீர்ப்பாசனம் மற்றும் ஈரப்பதத்தைக் கண்காணிக்க மேம்பட்ட டிஜிட்டல் அமைப்புகள் பயன்படுத்தப்பட்டு, நிலையான விவசாயம் உறுதி செய்யப்படுவதாகவும் ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.
தானியங்களைப் பொறுத்தவரை, இந்த எமிரேட் ‘Seven Ears’ என்று அழைக்கப்படும் அதன் சொந்த கோதுமை வகையையும் உருவாக்கியுள்ளது. இதில் ஒரு தானியத்திலிருந்து ஏழு கதிர்கள் உருவாகின்றன. இந்தப் திட்டம் பாரம்பரிய பயிர்களை நவீன டிஜிட்டல் கண்காணிப்புடன் இணைத்து, பாலைவனச் சூழலில் கோதுமை சாகுபடியை சாத்தியமாக்குகிறது.
அதுமட்டுமல்லாமல், மலை விவசாயத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 850 மீட்டர் உயரத்தில் உள்ள ஜெபல் தீம் (Jebel Deem) மலையில் உள்ள கமாம் திட்டத்தில் (ghamam project) ஷார்ஜா சமீபத்தில் தனது முதல் திராட்சை அறுவடையைப் பதிவு செய்தது. இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, திராட்சை, ஆலிவ், ஆப்பிள் மற்றும் மாதுளை உட்பட 4,500-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திட்டங்களுக்கு ஆதரவாக, அல் தைத் பல்கலைக்கழகத்தில் கல்வி மற்றும் ஆராய்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் துறைக்கான நிபுணர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, அந்தப் பல்கலைக்கழகம் விவசாயம், கால்நடை மருத்துவம் மற்றும் பாலைவன அறிவியல் படிப்புகளை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திறப்பு விழாவுக்குப் பிறகு, மிலைஹா பால் பண்ணை மற்றும் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்த ஷேக் சுல்தான், அங்கு உற்பத்திப் பிரிவுகள், பேக்கேஜிங் யூனிட்கள் , கட்டுப்பாட்டு அறைகள், பால் கறக்கும் வசதிகள் மற்றும் கால்நடை கொட்டகைகளை ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தரநிலைகள், உற்பத்தி செயல்முறைகள் மற்றும் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் அவருக்கு விளக்கமளித்தனர்.
ஷார்ஜாவின் விவசாயத் திட்டங்கள் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் நிலத்தின் பொறுப்பான மேலாண்மை ஆகியவற்றால் வழிநடத்தப்படுகின்றன என்று ஷேக் சுல்தான் கூறியுள்ளார். மேலும், உணவு என்பது மக்களின் ஆரோக்கியத்திற்கும் சமூகத்திற்கும் சேவை செய்ய வேண்டும், அது வெறும் ஒரு வணிகப் பொருளாக மாறிவிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel