ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சிப்பாதை குறித்த புதிய தரவுகளை, பொருளாதாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த தரவுகளின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிக மற்றும் சுற்றுலாத் துறைகள் 2025 ஆம் ஆண்டில் வலுவான வளர்ச்சியைக் கண்டிருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஜனவரி மற்றும் நவம்பர் 2025 க்கு இடையில், ஐக்கிய அரபு அமீரகம் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்களை ஈர்த்துள்ளது. இது நாட்டின் அதிகரித்து வரும் போட்டித்தன்மையையும் உலகளாவிய முதலீட்டு மையமாக அதன் ஈர்ப்பையும் பிரதிபலிக்கிறது. அதே காலகட்டத்தில், அமைச்சகம் 36,000 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச டிரேட் லைசென்ஸையும் பதிவு செய்தது, இது கடந்த ஆண்டை விட 48% அதிகமாகும்.
மேலும், அமீரகத்தின் சுற்றுலாத் துறையும் முக்கிய சர்வதேச அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதும் தரவுகளின் முடிவில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் ஹோட்டல்களின் செயல்பாடும் சிறப்பாக இருந்ததாக கூறப்படுகிறது.
வெளியான தரவுகளின் படி, ஐக்கிய அரபு அமீரக ஹோட்டல்கள் 23.27 மில்லியன் விருந்தினர்களை வரவேற்றுள்ளன. இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 4.9% அதிகரிப்பை கண்டுள்ளது. மேலும் 79.3 மில்லியனுக்கும் அதிகமான அறை முன்பதிவும் நடந்துள்ளது. இதானல், வருவாய் 7.2% அதிகரித்து 35.9 பில்லியனைத் தாண்டியுள்ளது.
இது குறித்து பொருளாதாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் அப்துல்லா பின் துக் அல் மர்ரி அவர்கள் கூறுகையில், 54வது ஈத் அல் எதிஹாத் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார மற்றும் சுற்றுலா சாதனைகள் யூனியனின் வலிமையையும், நாட்டின் தலைவர்களின் நீண்டகால தொலைநோக்குப் பார்வையையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக எடுத்துரைத்துள்ளார்.
மேலும், 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.2% உயர்வு மற்றும் எண்ணெய் அல்லாத மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7% அதிகரிப்பு மூலம், GCC-யில் மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை ஐக்கிய அரபு அமீரகம் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எண்ணெய் அல்லாத நடவடிக்கைகளின் பங்களிப்பு 77.5 சதவீதத்தை எட்டியுள்ளது, இது அமீரகத்தின் பொருளாதார பல்வகைப்படுத்தலின் முன்னேற்றத்தையும் அதன் பொருளாதார அடித்தளங்களின் வலிமையையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அத்துடன் நுகர்வோர் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, போட்டி மற்றும் நிலைத்தன்மை போன்ற துறைகளை ஆதரிக்கும் பல புதிய சட்டங்களை தொடர்ச்சியாக அமைச்சகம் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel