அபுதாபி நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC), அமீரகம் முழுவதும் சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தும் வகையில், போக்குவரத்து திசைதிருப்பல் விதிகளில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள், போக்குவரத்து அனுமதிகள் மற்றும் தடையில்லாச் சான்றிதழ்கள் (NOCs) தொடர்பான விதிகளைத் தெளிவுபடுத்துகின்றன. புதிய விதிமுறைகளின் கீழ், போக்குவரத்து அனுமதிகளை மற்றொரு தரப்பினருக்கு மாற்ற முடியாது என்றும், அவ்வாறு செய்ய முயற்சித்தால் அனுமதி தானாகவே ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் திருத்தங்கள், அனைத்து பாதுகாப்புத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில், முன் அனுமதிக்கான ஒப்புதல் இல்லாமலேயே அவசரகால சாலைப் பணிகளை தொடங்க அனுமதிக்கின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பணி தொடங்குவதற்கு முன்பு ITC-க்குத் தெரிவிக்க வேண்டும், பணி 12 மணி நேரத்திற்கு மேல் நீடித்தால், 24 மணி நேரத்திற்குள் முறையான அனுமதி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம், ITC தனது அமலாக்க அதிகாரங்களையும் வலுப்படுத்தியுள்ளது. அதன்படி சாலையில் மேற்கொள்ளப்படும் பணிகள் சாலைப் பயனர்களுக்கு ஆபத்தை விளைவித்தாலோ அல்லது நடைமுறைகள் பின்பற்றப்படாவிட்டாலோ, போக்குவரத்து அனுமதிகள் வழங்குவதை ITC தற்காலிகமாக நிறுத்தலாம்.
அதேபோல், ஒப்பந்தக்காரர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறினாலோ, அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவை அல்லது மீண்டும் மீண்டும் விதிமீறல்களில் ஈடுபட்டாலோ, நீட்டிப்புக் கோரிக்கைகளை நிராகரிக்கவோ அல்லது அனுமதிகளை ரத்து செய்யவோ அபுதாபி முனிசிபாலிட்டிக்கு அதிகாரம் உள்ளது.
தற்போது, போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் அபராதங்களின் பட்டியல் புதிய விதிகளுக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தத் திருத்தங்களுடன் முரண்படும் பழைய விதிமுறைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், போக்குவரத்து சீராகச் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, ITC ஒப்பந்தக்காரர்கள், ஆலோசகர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, வழக்கமான ஆய்வுகள் மற்றும் களப் பயணங்கள் தொடரும் என்றும், சாலைப் பயனர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொது உள்கட்டமைப்பைப் பாதுகாக்க விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
அபுதாபியின் டார்ப் சுங்கக் கட்டண அமைப்பில் மாற்றங்கள்
அபுதாபியில் கடந்த செப்டம்பர் 2025 முதல் டார்ப் சாலை சுங்கக் கட்டண அமைப்பிலும் மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காலை சுங்கக் கட்டண நேரம் காலை 7 மணி முதல் 9 மணி வரை மாற்றமின்றி தொடர்கிறது. மாலை சுங்கக் கட்டண நேரம் இப்போது மாலை 3 மணி முதல் 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 5 மணி வரை மட்டும் அமலில் இருந்தது.
கூடுதலாக, தனியார் வாகனங்களுக்கான தினசரி மற்றும் மாதாந்திர சுங்கக் கட்டண உச்சவரம்புகளையும் அபுதாபி முனிசிபாலிட்டி நீக்கியுள்ளது. இதில் முன்னர் இருந்த தினசரி உச்சவரம்பு கட்டணங்களான 16 திர்ஹம்ஸ் மற்றும் மாதாந்திர உச்சவரம்புகளான 200 திர்ஹம்ஸ், 150 திர்ஹம்ஸ் மற்றும் 100 திர்ஹம்ஸ் ஆகியவை அடங்கும்.
இருப்பினும், மாற்றுத்திறனாளிகள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் போன்ற தகுதியுள்ள குழுக்களுக்கு கட்டண விலக்குகள் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel