துபாய் டாக்ஸியில் பயணிக்கும்போது மொபைல், பர்ஸ் அல்லது பாஸ்போர்ட் போன்ற ஏதேனும், விலையுயர்ந்த சொத்துகள் அல்லது உடைமைகளை விட்டுச் செல்லும் நிகழ்வுகள் ஏற்படுவதுண்டு. அவ்வாறு தொலைந்த பொருட்களை உரியவர்களிடமே திருப்பி ஒப்படைக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் துபாய் எமிரேட் முழுவதும் உள்ள டாக்சிகளில் தொலைந்துபோன சொத்துகள் தொடர்பான 104,000 க்கும் மேற்பட்ட அறிக்கைகள் வெற்றிகரமாக கையாளப்பட்டதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளிப்படுத்தியுள்ளது. இந்த புள்ளிவிபரமானது தொழில்நுட்பம், குழுப்பணி மற்றும் நேர்மை ஆகியவை துபாய் டாக்சி மீதான பயணிகளின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இது தொடர்பாக RTA வெளியிட்ட அறிக்கையில், 2025 ஆம் ஆண்டில் டாக்சிகளில் விட்டுச் செல்லப்பட்ட பொருட்கள் குறித்த 104,162 அறிக்கைகளை நிர்வகித்ததாக தெரிவித்துள்ளது. RTA-வின் கூற்றுப்படி, ஒவ்வொரு விட்டு செல்லப்பட்ட பொருளும் பயண விவரங்களைச் சரிபார்த்தல், டாக்ஸி இயக்கங்களைக் கண்காணித்தல் மற்றும் ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி நிறுவனங்களுடன் நேரடியாக ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட கட்டமைக்கப்பட்ட செயல்முறை மூலம் கையாளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தாமதங்களைக் குறைத்து உரியவர்களிடம் பொருளை ஒப்படைக்கும் நேரத்தை துரிதப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து RTA-வின் கார்ப்பரேட் நிர்வாக ஆதரவு சேவைகள் துறையின் வாடிக்கையாளர் மகிழ்ச்சியின் இயக்குனர் மீரா அல் ஷேக் (Meera Al Shaikh) அவர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “வாடிக்கையாளர் மகிழ்ச்சி தொடர்பான இலக்குகள் மற்றும் நோக்கங்களை செயல்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களை RTA அதன் முன்னுரிமைகளில் வைக்கிறது” என்று கூறியுள்ளார்.
இழந்த உடைமை அறிக்கையிடல் கட்டமைப்பை மிகவும் நம்பகமானதாக மாற்றுவது சிறப்புக் குழுக்களின் கிடைக்கும் தன்மை மற்றும் கால் சென்டர், டாக்ஸி நிறுவனங்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு இடையேயான பயனுள்ள ஒருங்கிணைப்பு என்றும், இவை அனைத்தும் ஸ்மார்ட் தொழில்நுட்ப அமைப்புகளால் ஆதரிக்கப்படுகின்றன என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
பயணிகள் விட்டுச் சென்றவையும் மீட்டெடுக்கப்பட்டவையும்
மீட்டெடுக்கப்பட்ட பொருட்களின் அளவானது செயல்திறன் மற்றும் நேர்மை இரண்டையும் பிரதிபலிப்பதாக கூறப்பட்டுள்ளது. 2 மில்லியன் திர்ஹம்ஸ்க்கும் அதிகமான பணம் உரிமையாளர்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக RTA தெரிவித்துள்ளது, அத்துடன் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற சுமார் 35,000 எலெக்ட்ரானிக் சாதனங்களும் இதில் அடங்கும். இந்த பட்டியலில் தோராயமாக 3,000 பாஸ்போர்ட்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள், நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க தனிப்பட்ட பொருட்களும் அடங்கும் என்றும் RTA தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் ரிப்போர்டிங், விரைவான மீட்பு
துபாயைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் தாங்கள் இழந்த பொருட்களை பல வழிகள் மூலம் புகாரளிக்கலாம், இதனால் செயல்முறை விரைவாகவும் அணுகக்கூடியதாகவும் இருக்கும் என கூறப்படுகின்றது. RTA வெளியிட்டுள்ள தரவுகளின் படி, அழைப்பு மையம் 56 சதவீத புகார்களைக் கையாண்டது என்றும், அதே நேரத்தில் 10.8 சதவீதம் ஸ்மார்ட் அப்ளிகேஷன்கள் மூலம் வந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30.8 சதவீதம் பேர் RTAவின் மெய்நிகர் அரட்டை முகவரான (virtual agent) மஹ்பூப் வழியாக புகாரளித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
கூடுதலாக, தெளிவான ஒப்படைப்பு நடைமுறைகள், அடையாள சரிபார்ப்பு, தனியுரிமை பாதுகாப்பு மற்றும் பொருட்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதை உறுதி செய்கின்றன. இதன் மூலம், பெரும்பாலும் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் உடைமை திருப்பி ஒப்படைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக வாடிக்கையாளர் திருப்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2025 இல் மட்டும் அழைப்பு மையம் 30 க்கும் மேற்பட்ட பாராட்டு செய்திகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
மற்றொரு பக்கம், துபாயின் நேர்மை, பொறுப்பு மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், தொலைந்து போன பொருட்களை உடனடியாக ஒப்படைத்ததற்காக பல டாக்ஸி ஓட்டுநர்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் என்பது சிறப்பிற்குரியது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel