துபாய் முழுவதும் உள்ள நிகழ்நேர எலெக்ட்ரானிக் சாலை அடையாளங்கள், வாகன ஓட்டிகள் தங்கள் இலக்குகளை வேகமாகவும் பாதுகாப்பாகவும் அடைய உதவுகின்றன என்றும், முக்கிய சாலைகளில் பயண நேரத்தை 20 சதவீதம் வரை குறைக்கின்றன என்றும் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.
தற்போது அமீரகத்தின் முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் வழித்தடங்களில் 112 டைனமிக் மெசேஜ் சிக்னல்களை (DMS) இயக்கி வருவதாக RTA கூறியுள்ளது. மேலும், இந்த டிஜிட்டல் பலகைகள் ‘iTraffic’ தளம் வழியாக துபாயின் நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகள் மையத்துடன் (Intelligent Traffic Systems Centre)இணைக்கப்பட்டுள்ளதாகவும், அவை AI மற்றும் பிக் டேட்டாகளைப் பயன்படுத்தி சாலை நிலைகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்கின்றன எனவும் RTA தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும், இந்த எலெக்ட்ரானிக் பலகைகள் 17,800-க்கும் மேற்பட்ட செய்திகளைக் காண்பித்துள்ளன. அவற்றில் பெரும்பாலான எச்சரிக்கைகள் சாலை விபத்துகள் தொடர்பானது. அதைத் தொடர்ந்து, போக்குவரத்து நெரிசல், வாகனப் பழுதுகள், சாலை மூடல்கள், மோசமான வானிலை மற்றும் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் குறித்த எச்சரிக்கைகளும் இடம்பெற்றன.
எந்தவொரு சம்பவத்திற்கும் முன்பே ஓட்டுநர்களை எச்சரிப்பதன் மூலம் இந்த அமைப்பு பாதுகாப்பை மேம்படுத்துகிறது என்று அந்த ஆணையம் விளக்கியுள்ளது. விபத்து நடக்கும் இடத்திற்கு இரண்டு கிலோமீட்டர் முன்பே எச்சரிக்கைகள் தொடங்கப்படலாம். அதைத் தொடர்ந்து, போக்குவரத்து நெரிசல் குறித்த புதுப்பிப்புகள் மற்றும் வழிகாட்டுதல் செய்திகள் மூலம் போக்குவரத்தைத் திசைதிருப்பி, மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
முக்கிய நிகழ்வுகள், அவசரநிலைகள் மற்றும் போக்குவரத்து திசைதிருப்பல்களின் போது இந்தச் சின்னங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றும், அதே நேரத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கும் ஆதரவளிக்கின்றன என்றும் RTA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடுதலாக, நகரம் முழுவதும் உள்ள 22 சிக்னல்கள் துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் துபாய் மெரினா போன்ற பிரபலமான இடங்களுக்கான நேரலை பயண நேரங்களைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது, இது ஓட்டுநர்கள் வேகமான வழிகளைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது.
இந்த அமைப்பு, போக்குவரத்து அளவு, வாகன வேகம், பயண நேரங்கள் மற்றும் வானிலை நிலைகளைக் கண்காணிக்கும் சாலை சென்சார்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளைச் சார்ந்துள்ளது. இந்தத் தகவல்கள் மையப்படுத்தப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படுவதால், விரைவான முடிவுகளை எடுக்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல், கனமழை அல்லது மூடுபனி போன்ற சூழ்நிலைகளின் போது சில எச்சரிக்கைகள் தானாகவே செயல்படுத்தப்படுகின்றன என்றும் RTA கூறியுள்ளது.
RTA-வின் கூற்றுப்படி, டைனமிக் மெசேஜ் சிக்னல் வலையமைப்பை விரிவுபடுத்துவதும் மேம்படுத்துவதும் துபாயின் பரந்த ஸ்மார்ட் நகரத் திட்டங்களின் ஒரு பகுதியாகும். இது குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைவருக்கும் தினசரி பயணத்தை மென்மையாகவும், பாதுகாப்பாகவும், திறமையாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel