துபாயை தளமாகக் கொண்டு செயல்படும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் தனது பணியாளர்களை கணிசமாக விரிவுபடுத்த உள்ளது, மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 20,000 புதிய ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது, ஏனெனில் விமான நிறுவனம் அதிக விமானங்களை ஆர்டர் செய்து பெறவும் அதன் உலகளாவிய வழித்தடங்களை விரிவுபடுத்தவும் தயாராகி வருவதால் ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணிக்கு அமர்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தி ஊடகங்களிடம் பேசிய எமிரேட்ஸின் துணைத் தலைவரும் தலைமை செயல்பாட்டு அதிகாரியுமான அடெல் அல் ரெதா (Adel Al Redha), நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு நடவடிக்கை புதிய இடங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள வழித்தடங்களில் அதிகரித்த விமானங்களின் எண்ணிக்கை உட்பட விமான நிறுவனத்தின் விரிவடையும் செயல்பாடுகளை ஆதரிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் அடுத்த தசாப்தத்தில், கேபின் பணியாளர்கள், விமானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விமான நிலைய பணியாளர்கள் போன்ற பதவிகளை உள்ளடக்கிய கிட்டத்தட்ட 20,000 செயல்பாட்டு ஊழியர்களை சேர்க்க விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எமிரேட்ஸ் குழுமம் 2024–25 நிதியாண்டில் 124,000 ஊழியர்களைக் கொண்டிருந்தது, மேலும் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள்ளும் சர்வதேச அளவிலும் தகுதிவாய்ந்த திறமையாளர்களை ஈர்ப்பதில் விமான நிறுவனம் எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளவில்லை என்று அல் ரெதா குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு திறமையான நிபுணர்களை தொடர்ந்து ஈர்ப்பதற்கு துபாயின் உலகளாவிய ஈர்ப்பு, பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவை முக்கியக் காரணங்கள் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
அதேசமயம், விமான நிறுவனம் அதன் எமிராட்டிசேஷன் முயற்சிகளை வலுப்படுத்தி வருகிறது, குறிப்பாக பொறியியல், ஐடி, மேலாண்மை மற்றும் கேடட் பைலட் போன்ற பதவிகளில் ஐக்கிய அரபு அமீரக நாட்டினருக்கு பயிற்சி அளித்து ஆட்சேர்ப்பு செய்வதை நோக்கமாகக் கொண்ட பல திட்டங்கள் உள்தாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்போது, பொறியியல் மற்றும் கேடட் திட்டங்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 120 எமிராட்டிகள் சேர்க்கப்படுகிறார்கள், மேலும் பயிற்சி திறனை விரிவுபடுத்துவதன் மூலம் ஆட்சேர்ப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
மேலும் வணிக செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த அல் ரெதா, எமிரேட்ஸ் தனது 2025–26 நிதியாண்டின் முதல் பாதியில் வலுவான முடிவுகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel