ADVERTISEMENT

அமீரகத்தின் தேசிய ரயில் நெட்வொர்க்: 7 புதிய பயணிகள் நிலையங்களை அறிவித்த எதிஹாட் ரயில்!!

Published: 8 Jan 2026, 8:10 PM |
Updated: 8 Jan 2026, 8:10 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தனது முதல் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய பயணிகள் ரயில் சேவையைத் தொடங்கத் தயாராகி வரும் நிலையில், எதிஹாட் ரயில் மேலும் ஏழு புதிய பயணிகள் ரயில் நிலையங்களைச் சேர்ப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள நிலையங்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிலையங்கள் அல் சிலா, அல் தானா, அல் மிர்ஃபா, மதீனத் சையத், மெஸைரா, அல் ஃபயா மற்றும் அல் தைத் ஆகிய இடங்களில் அமையவுள்ளன. இவை, முன்னதாக அறிவிக்கப்பட்ட முகமது பின் சையத் சிட்டி (அபுதாபி), ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்ஸ் (துபாய்), யுனிவர்சிட்டி சிட்டி (ஷார்ஜா) மற்றும் அல் ஹிலால் பகுதி (ஃபுஜைரா) ஆகிய இடங்களில் உள்ள நிலையங்களுடன் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

எதிஹாட் ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்த நிலையங்கள் கட்டம் கட்டமாகத் திறக்கப்பட்டு, 11 நகரங்களையும் பிராந்தியங்களையும் இணைக்கும் என்பது தெரிய வந்துள்ளது. இது பயண வசதியை மேம்படுத்தவும் சாலை நெரிசலைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு நாடு தழுவிய பயணிகள் ரயில் அமைப்பை உருவாக்கும் என்றும், முக்கிய மக்கள் மையங்களுக்கு சேவை செய்யும் வகையில் நிலையங்களின் இருப்பிடங்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

நவீன ரயில்களின் சிறப்பம்சங்கள்

முன்னதா, பயணிகள் ரயில்களில் பிஸினஸ் கிளாஸ் மற்றும் எகானமி கிளாஸ் இருக்கைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிஸினஸ் கிளாஸில் 16 இருக்கைகளும், எகனாமி கிளாஸில் ஒரு பெட்டிக்கு 56 இருக்கைகளும் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ரயில்களில் வைஃபை, ஒவ்வொரு இருக்கையிலும் மின்சார அவுட்லெட்டுகள் மற்றும் வசதியான பயண அனுபவத்தை உறுதி செய்வதற்காக ஒரு நவீன உட்புற வடிவமைப்பு ஆகியவை இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ரயிலும் 400 பயணிகள் வரை ஏற்றிச் செல்லக்கூடியது மற்றும் ஒரு வழக்கமான அட்டவணையின்படி இயக்கப்படும், இது வேகமான மற்றும் நகரங்களுக்கு இடையே திறமையான பயணத்தை வழங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 13 ரயில்களில் 10 ரயில்கள் ஏற்கனவே வந்துவிட்டன, அவை சோதிக்கப்பட்டு, சர்வதேச பாதுகாப்பு மற்றும் தரங்களுக்குச் சான்றளிக்கப்பட்டுள்ளன என்று எதிஹாட் ரயில் உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து எதிஹாட் ரயிலின் தலைமைத் திட்ட அதிகாரி முகமது அல்ஷேஹி பேசுகையில், இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகாலத் தீவிரத் திட்டமிடலின் விளைவாகும் என்றும், இதில் 7,000-க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் 24.5 மில்லியனுக்கும் அதிகமான வேலை நேரங்கள் ஈடுபட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து பேசிய துணை தலைமைச் செயல் அதிகாரி அஸ்ஸா அல்சுவைதி, 2023-ல் தொடங்கப்பட்ட எதிஹாட் ரயிலின் சரக்கு சேவைகளின் அடிப்படையில், இந்த பயணிகள் ரயில் வலையமைப்பு ஐக்கிய அரபு அமீரகத்தின் போக்குவரத்து அமைப்பின் ஒரு முக்கிய தூண் என்று விவரித்தார். இந்த வலையமைப்பு நம்பகமான மற்றும் திறமையான சேவையை வழங்க மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அடுத்த தலைமுறை ரயில்களைப் பயன்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

செயல்பாடுகள் மற்றும் தேசிய தாக்கம்

கடந்த ஆண்டு அக்டோபரில், பயணிகள் ரயில் செயல்பாடுகளை நிர்வகிப்பதற்காக உலகளாவிய போக்குவரத்து நிறுவனமான ‘கியோலிஸ் (Keolis)’ உடன் எதிஹாட் ரயில் ஒரு கூட்டு முயற்சியில் கையெழுத்திட்டது. கியோலிஸ் நிறுவனம் பேருந்துகள், டாக்சிகள் மற்றும் பார்க்கிங் மண்டலங்கள் போன்ற இணைப்புச் சேவைகளையும் மேற்பார்வையிடும், இது நாடு முழுவதும் பயணிகளுக்குப் பயணங்களை மேலும் எளிதாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது செயல்பாட்டிற்கு வந்தவுடன், இந்த பயணிகள் ரயில் வலையமைப்பு சுற்றுலாவை மேம்படுத்தும், பொருளாதார மற்றும் சமூகத் தொடர்புகளை வலுப்படுத்தும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும், மற்றும் நாடு தழுவிய இணைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பில் ஒரு முக்கிய முன்னேற்றப் படியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel