2026 புத்தாண்டு முடிந்துவிட்டாலும், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கொண்டாட்டங்கள் இன்னும் முடிவடையவில்லை. நாடு முழுவதும் இதமான குளிர்கால வானிலை நிலவுவதால், குடியிருப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வெளிப்புற நிகழ்வுகள், குடும்பத்தினருடன் மகிழக்கூடிய இடங்கள் மற்றும் பண்டிகை அனுபவங்களை ஒரு திர்ஹம் கூட செலவழிக்காமல் அனுபவிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
அதிரடித் தள்ளுபடிகளை வழங்கும் ஷாப்பிங் நிகழ்வுகள் முதல் கண்ணைக் கவரும் ஒளி நிகழ்ச்சிகள் வரை, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நீங்கள் இன்னும் அனுபவிக்கக்கூடிய ஐந்து இலவச நிகழ்வுகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
1. துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் (DSF)
துபாயின் பிரபலமான வர்த்தகக் கொண்டாட்டமான துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல், வணிக வளாகங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் 90 சதவீதம் வரை தள்ளுபடிகளுடன் மக்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
ஷாப்பிங்கிற்கு அப்பால், ட்ரோன் நிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள் மற்றும் பிரபலங்களின் நேரடி நிகழ்ச்சிகளும் இந்தாண்டு DSFஇல் இடம்பெறுகின்றன. அதுமட்டுமல்லாமல், பார்வையாளர்கள் மெகா குலுக்கல் போட்டிகள் மூலம் நிசான் பேட்ரோல் கார், 1 மில்லியன் திர்ஹம் ரொக்கம் மற்றும் ஒரு மில்லியன் ப்ளூ பாயிண்டுகள் போன்ற பரிசுகளை வெல்லும் வாய்ப்பையும் பெறலாம். இந்த மாபெரும் விற்பனை நிகழ்வு ஜனவரி 11 வரை நடைபெறுகிறது.
2. புத்தாண்டு துபாய் ஃபவுன்டைன் நிகழ்ச்சிகள்
துபாயில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்றாலே புர்ஜ் கலிஃபா மற்றும் துபாய் பவுண்டைனுடன் நெருங்கிய தொடர்புடையவை. இவை மீண்டும் ஒருமுறை வாணவேடிக்கைகள் மற்றும் ஒளிக்காட்சிகள் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கின்றன.
இந்த ஆண்டு கொண்டாட்டங்களில், லெபனான் இசைக் குழுவான யாஸ்மினா சபா காற்றில் தொங்கியபடி ஒரு இசைக்குழுவை வழிநடத்தியது ஒரு சிறப்பான தருணமாக அமைந்தது. இந்த உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், துபாய் பவுண்டைன் நிகழ்ச்சிகள் ஜனவரி 1-க்குப் பிறகும் நீட்டிக்கப்பட்டு, ஜனவரி 7 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளத. இது குடியிருப்பாளர்களுக்கு இந்த கண்கவர் காட்சியை அனுபவிக்க அதிக வாய்ப்புகளை வழங்குகிறது.
3. உம் சுகீம் கடற்கரையில் அமீரகத்தின் ‘Flag Garden’
ஐக்கிய அரபு அமீரக தேசிய தினம் மற்றும் கொடி தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, உம் சுகீம் கடற்கரை ஒரு பிரம்மாண்டமான கொடித் தோட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான ஐக்கிய அரபு அமீரகக் கொடிகள், தேசத்தின் ஸ்தாபகத் தலைவர்களான ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் மற்றும் ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் ஆகியோரின் வான்வழிப் படங்களை (aerial portraits) உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பு ஜனவரி 10 வரை பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. ப்ளூவாட்டர்ஸில் ட்ரோன் நிகழ்ச்சிகள்
ப்ளூவாட்டர்ஸ் ஐலேண்ட், “Celebrations” என்ற கருப்பொருளின் கீழ் இரவு நேர ட்ரோன் நிகழ்ச்சிகளால் வானத்தை ஒளிரச் செய்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு, ப்ளூவாட்டர்ஸ் மற்றும் தி பீச், JBR-க்கு இடையேயான பகுதியில் பிரமிக்க வைக்கும் வான்வழி காட்சிகள் (aerial spectacle) உருவாக்கப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சியில் ஜானி டெப்பின் (Johnny Depp) ‘The Bunnyman’ என்ற கலைப்படைப்பால் ஈர்க்கப்பட்ட காட்சிகள் இடம்பெறும் எனவும், அதே நேரத்தில் அய்ன் துபாயும் ஒரு இணையான ஒளி நிகழ்ச்சியை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, சிறப்பு ஸ்கைடைவர்களின் சாகச நிகழ்ச்சிகள் ஜனவரி 10 அன்று திட்டமிடப்பட்டுள்ளன, மேலும் ட்ரோன் காட்சிகள் ஜனவரி 11 வரை தினசரி தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
5. ஃபெஸ்டிவல் சிட்டியில் வாணவேடிக்கை
துபாய் ஃபெஸ்டிவல் சிட்டியில் இரவு 8.30 மணிக்கு தினசரி வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அத்துடன், இசை, நடனம் மற்றும் நாடகம் உள்ளிட்ட இலவச நேரலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.
கடற்கரையோரம் நடைபெறும் இந்த கொண்டாட்டங்கள் தொடர்ச்சியாக 38 நாட்கள் நீடிக்கும் மற்றும் ஜனவரி 11 அன்று முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குடியிருப்பாளர்களுக்கு இந்த விழாச் சூழலை அனுபவிக்க ஒரு கடைசி வாய்ப்பை வழங்குகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel