ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே கடும் குளிர் நிலவி வருகின்றது. இந்நிலையில் தற்பொழுதுள்ள இருக்கும் நிலையற்ற வானிலை ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளை பாதித்ததைத் தொடர்ந்து, இன்று (ஜனவரி 26, திங்கட்கிழமை) அதிகாலை அல் ராம்ஸ் மற்றும் ராஸ் அல் கைமாவின் பிற வடக்குப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது, இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில் விடியற்காலையில் ஆலங்கட்டி மழை பெய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், ராஸ் அல் கைமா மற்றும் புஜைராவின் சில பகுதிகளிலும் இரவு முழுவதும் மழை பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் அல் அய்னில் ஆங்காங்கே சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்த மழை வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் குளிர்ந்த வானிலையை கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) கூற்றுப்படி, தற்போது நிலவும் வானிலை குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு அதிகரிப்பதற்கு வழிவகுத்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் கடலோர மற்றும் தீவுப் பகுதிகளில் பகல்நேர வெப்பநிலை 20°C முதல் 24°C வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் உள் பகுதிகளில் அதிகபட்சமாக 22°C முதல் 26°C வரை இருக்கும், அதே நேரத்தில் மலைப்பகுதிகள் 12°C முதல் 18°C வரை குளிர்ச்சியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவில், வெப்பநிலை மேலும் குறைந்து, கடற்கரையில் 12°C–17°C ஆகவும், நாட்டின் உள்பகுதிகளில் 8°C–13°C ஆகவும், மலைப்பகுதிகளில் 6°C–11°C ஆகவும் குறையும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேசமயம், ஈரப்பதம் இன்று இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக கடலோர மற்றும் உள் பகுதிகளில், மூடுபனி உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காற்று லேசானது முதல் மிதமானது வரை இருக்கும், ஆனால் அவ்வப்போது வலுவடைந்து, திறந்த பகுதிகளில் தூசி வீசக்கூடும் என்று NCM அறிவித்துள்ளது.
கடல் நிலைமைகளைப் பொறுத்தவரை, அரேபிய வளைகுடாவில் கடல் மிதமானது முதல் சீற்றமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் ஓமன் கடல் சில நேரங்களில் சீற்றமாக இருக்கும், பின்னர் படிப்படியாக சரியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
வரும் நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
செவ்வாய்க்கிழமை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் மேகங்கள் உருவாகும். ஈரப்பதம் இரவு முழுவதும் அதிகரிக்கும், புதன்கிழமை காலைக்குள் மூடுபனி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம் என்று வானிலை முன்னறிவிப்புகள் கூறுகின்றன.
புதன்கிழமை இதே போன்ற நிலைமைகள் எதிர்பார்க்கப்படுகின்றன, வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் மற்றும் அதிகாலை மூடுபனிக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel