ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாக குளிர் நிலவி வரும் பட்சத்தில், நாட்டின் சில பகுதிகளில் இன்று அதிகாலை வெப்பநிலை உறைபனிக்கு அருகில் சென்றதால், இன்று வெளியில் செல்லும் குடியிருப்பாளர்கள் கடுமையான குளிர்காலக் குளிரை அனுபவித்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்ட வானிலை அறிவிப்பின் படி, ராஸ் அல் கைமாவில் உள்ள ஜெபல் ஜெய்ஸில் இன்று காலை 5.45 மணிக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 0.2°C ஆக இருந்தது என்பது தெரிய வந்துள்ளது.
முன்னதாக , ஜனவரி மாதத்தின் இரண்டாம் பாதியில் நாட்டில் குளிர் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்ததைத் தொடர்ந்து, அமீரகம் தற்போது பருவத்தின் மிகவும் குளிரான குளிர்கால கட்டத்தை அனுபவித்து வருகிறது.
அதன்படி, நாட்டில் உள்ள பல மலை மற்றும் உள்நாட்டுப் பகுதிகளில் விடியற்காலையில் வழக்கத்திற்கு மாறாக மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இன்று பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை
- ஜெய்ஸ் மலை: காலை 5.45 மணிக்கு 0.2°C
- மெப்ரே மலை: காலை 5.15 மணிக்கு 3.1°C
- ஜபல் அல் ரஹ்பா: காலை 6.45 மணிக்கு 3.2°C
- ரக்னா: காலை 7.15 மணிக்கு 4°C
- ஹஃபீத் மலை: காலை 5.30 மணிக்கு 6.7°C
அமீரகம் இதுபோன்ற குளிர் நிலையை அனுபவிப்பது இது முதல் முறை அல்ல. 2021 இல், சில பகுதிகளில் பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது, ரக்னாவில் வெப்பநிலை -1.7°C ஆகக் குறைந்தது.
இருப்பினும், அமீரகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட குளிரான வெப்பநிலை -5.7°C ஆக உள்ளது, இது பிப்ரவரி 3, 2017 அன்று நாட்டின் மிக உயர்ந்த சிகரமான ஜெபல் ஜெய்ஸில் பதிவு செய்யப்பட்டது. அடுத்த நாள், பிப்ரவரி 4, 2017 அன்று, அதே மலைத்தொடரில் வெப்பநிலை மீண்டும் -3°C ஆகக் குறைந்தது.
ஜெபல் ஜெய்ஸ் இதற்கு முன்பு பனிப்பொழிவையும் கண்டுள்ளது. ஜனவரி 24, 2009 அன்று, சுமார் 5,700 அடி உயரத்தில் அமைந்துள்ள மலைத்தொடரின் ஐந்து கிலோமீட்டருக்கும் அதிகமான பகுதியை பனி மூடிய நிகழ்வும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel