ADVERTISEMENT

துபாயில் விறுவிறுவென முடிக்கப்படும் சாலைக் கட்டுமானப் பணிகள்.. முக்கிய சாலைத் திட்டத்தின் 60% பணிகள் முடிக்கப்பட்டதாக RTA அறிவிப்பு!!

Published: 5 Jan 2026, 5:00 PM |
Updated: 5 Jan 2026, 5:00 PM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), ஓத் மேத்தா சாலை மற்றும் அல் அசாயெல் ஸ்ட்ரீட் மேம்பாட்டுத் திட்டத்தின் 60 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இது பரந்த ஷேக் ரஷீத் வழித்தட மேம்பாட்டுத் (Sheikh Rashid Corridor Development) திட்டத்தின் கீழ் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டத்தில் நான்கு முக்கிய இண்டர்செக்ஷன்கள், 4.3 கி.மீ நீளமுள்ள பாலங்கள் மற்றும் 14 கி.மீ நீளத்திற்கு மேம்படுத்தப்பட்ட சாலைகள் ஆகியவை அடங்கும். இது நிறைவடைந்ததும், 2030-ஆம் ஆண்டுக்குள் 420,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு சேவை செய்யும் என்றும், துபாயின் பல முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து ஓட்டம் மற்றும் இணைப்பை கணிசமாக மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் அல் அசாயெல் ஸ்ட்ரீட் மற்றும் அல் கைல் சாலைக்கு இடையே அல் வாஸ்ல் கிளப் ஸ்ட்ரீட் வழியாக இணைப்புகளை மேம்படுத்துகிறது. அதே நேரத்தில், ஓத் மேத்தா சாலை மற்றும் அல் வாஸ்ல் கிளப் ஸ்ட்ரீட்டுக்கு ஒரு பிரத்யேக எக்ஸிட் பாதையையும் வழங்குகிறது. RTA வெளியிட்டுள்ள விபரங்களின் படி, அல் அசாயெல் ஸ்ட்ரீட்டிலிருந்து அல் கைல் சாலை வழியாக பிசினஸ் பே கிராசிங் நோக்கிச் செல்லும் போக்குவரத்திற்கான பாலப் பணிகளில் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தச் சாலையைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் RTA தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், துபாய்–அல் அய்ன் சாலையை அல் வாஸ்ல் கிளப் ஸ்ட்ரீட்டுடன் இணைக்கும் சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணிகளில் சுமார் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் பாலக் கட்டமைப்புகள் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தத் திட்டம் ஜபீல், அல் ஜடாஃப், ஓத் மேத்தா, உம் ஹுரைர், லத்தீஃபா மருத்துவமனை மற்றும் அல் வாஸ்ல் கிளப் உள்ளிட்ட முக்கிய குடியிருப்பு மற்றும் சேவைப் பகுதிகளுக்கு ஆதரவளிக்கிறது. இது நிறைவடைந்ததும், ஓத் மேத்தா சாலையின் போக்குவரத்து திறனை இரு திசைகளிலும் மணிக்கு 10,400 வாகனங்களிலிருந்து 15,600 வாகனங்களாக, 50 சதவீதம் அதிகரிக்கும். மேலும், இந்த வழித்தடத்தில் பயண நேரம் 75 சதவீதம் குறைந்து, 20 நிமிடங்களிலிருந்து வெறும் ஐந்து நிமிடங்களாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

நான்கு மேம்படுத்தப்பட்ட இண்டர்செக்ஷன்கள்

முதல் இண்டர்செக்ஷன்

ஓத் மேத்தா சாலை–ஷேக் ரஷீத் சாலை இண்டுர்செக்ஷனில், அல் கர்ஹூத் பாலம் நோக்கிச் செல்லும் புதிய இடதுபுற சரிவுப் பாதை, போக்குவரத்து திறனை மணிக்கு 1,800 வாகனங்களாக அதிகரிக்கும். கூடுதல் மேம்பாடுகளில் அகலமான சர்வீஸ் சாலைகள் மற்றும் வலதுபுறத் திருப்பப் பாதைகளின் எண்ணிக்கை இரண்டிலிருந்து மூன்றாக அதிகரிப்பது ஆகியவை அடங்கும். இது போக்குவரத்து திறனை மணிக்கு 4,000 வாகனங்களாக உயர்த்தும்.

இரண்டாவது இன்டர்செக்ஷன்

ஓத் மேத்தா சாலை–அல் அசாயெல் ஸ்ட்ரீட் –அல் வாஸ்ல் கிளப் ஸ்ட்ரீட் இண்டர்செக்ஷனில், அல் அசாயெல் ஸ்ட்ரீட்டுக்கும் அல் கைல் சாலைக்கும் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்த இரண்டு புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு தனி இரண்டு வழிப் பாலம், அல் அசாயெல் ஸ்ட்ரீட்டிலிருந்து ஓத் மேத்தா சாலைக்கு இடதுபுறம் திரும்புவதையும் எளிதாக்கும், அதே நேரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அல் வாஸ்ல் கிளப்பிற்கான சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

மூன்றாவது இண்டர்செக்ஷன்

அல் வாஸ்ல் கிளப் ஸ்ட்ரீட் –அல் கைல் சாலை இன்டர்செக்ஷனில், பிசினஸ் பே கிராசிங்கை நோக்கி ஒரு புதிய இரண்டு வழிப் பாலம், சர்வீஸ் சாலைகள், அதிகரிக்கப்பட்ட வெளியேறும் திறன் மற்றும் அணுகல்தன்மையை மேம்படுத்த பிரத்யேக வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.

நான்காவது இன்டர்செக்ஷன்

ஜபீல் பேலஸ் ஸ்ட்ரீட் இண்டர்செக்ஷனில், அல் கைல் சாலையிலிருந்து துபாய்–அல் அய்ன் சாலைக்கு ஒரு கூடுதல் இணைப்புச் சாலை, அல் வாஸ்ல் கிளப் ஸ்ட்ரீட்டை நோக்கி ஒரு புதிய வாகனச் சுரங்கப்பாதை, மற்றும் தற்போதுள்ள பாலம் இரண்டு வழித்தடங்களிலிருந்து மூன்று வழித்தடங்களாக விரிவாக்கம் செய்யப்படுவது போன்ற மேம்படுத்தல்கள் அடங்கும்.

ஒட்டுமொத்தத்தில், இந்தத் திட்டம் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதிலும், பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் மற்றும் துபாயின் நீண்டகால நகர்ப்புற வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் என்று சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel