ஷார்ஜாவின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மதியம் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பல சுற்றுப்புறங்களில் உள்ள குடியிருப்பாளர்களின் அரசாங்க சேவைகள், வணிக நடவடிக்கைகள் மற்றும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டன.
குடியிருப்பாளர்களின் கூற்றுப்படி, இந்த மின்வெட்டு மதியம் 12 மணியளவில் தொடங்கி, அல் மஜாஸ், அல் தாவூன், அல் கான், அல் மம்சார், முவைலே, ரஹ்மானியா புறநகர்ப் பகுதிகள் மற்றும் அல் நஹ்தாவின் சில பகுதிகள் உட்பட பல பகுதிகளைப் பாதித்தது. ஜமால் அப்துல் நாசர் ஸ்ட்ரீட் மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகள் போன்ற முக்கிய இடங்களும் பாதிக்கப்பட்டவற்றில் அடங்கும்.
மின்வெட்டிற்கான காரணம்
ஷார்ஜா மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் (Sewa) பவர் சப்ளை நெட்வொர்க்கில் ஏற்பட்ட அவசரகால தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த இடையூறு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்தக் கோளாறு ஆட்டோமேட்டிக் பாதுகாப்பு அமைப்புகளைத் தூண்டியதாகவும், இது மின் கட்டத்தின் நிலைத்தன்மையைப் பாதுகாக்கவும், சிக்கல் பரந்த பகுதிக்கு பரவாமல் தடுக்கவும் பாதிக்கப்பட்ட பிரிவுகளைத் துண்டித்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவிக்கையில் எதிர்பாராத கோளாறுகளின் போது உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காகவே இந்த அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடியிருப்பாளர்கள் அவதி
இந்த மின்வெட்டு எமிரேட் முழுவதும் தற்காலிக இடையூறுகளுக்கு வழிவகுத்தது. குறிப்பாக, உயரமான கட்டிடங்களில் லிஃப்ட்கள் இயங்கவில்லை, நெட்வொர்க் இணைப்புச் சிக்கல்கள் மற்றும் வழக்கமான செயல்பாடுகளில் தாமதங்கள் ஏற்பட்டதாக குடியிருப்பாளர்கள் புகாரளித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், மின்வெட்டு காரணமாக பல்வேறு அரசாங்க சேவைகள் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன. ஷார்ஜா முனிசிபாலிட்டி அலுவலகத்தில் தனது வாடகை ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும்போது, செயல்முறையின் நடுவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், ஊழியர்கள் பரிவர்த்தனைகளை ரத்து செய்து, குடியிருப்பாளர்களைப் பின்னர் வருமாறு கேட்டுக் கொண்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், மக்களின் அன்றாட வணிக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. பெரும்பாலான பகுதிகளில் ATM இயந்திரங்கள் செயல்படுவதை நிறுத்தியதால், சிலரால் பணம் எடுக்க முடியவில்லை என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். மளிகைக் கடைகள் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்களில் தாமதங்கள் ஏற்பட்டன. மின்சாரம் எப்போது வரும் என்ற நிச்சயமற்ற தன்மையால் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்காமல் திரும்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
மின் இணைப்பு மீட்டெடுப்பு முயற்சிகள்
இது தொடர்பாக ‘Sharjah Government Media Bureau’ வெளியிட்ட ஒரு அறிக்கையில், எமிரேட்டில் நிலைமையைக் கண்காணிக்கவும் சேவைகளை மீட்டெடுக்கவும் தொழில்நுட்பக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டதாகவும், பாதுகாப்பு நடைமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதாகவும் குடியிருப்பாளர்களுக்கு உறுதியளித்தது.
மேலும், பாதிக்கப்பட்ட பிரிவுகளைத் தனிமைப்படுத்தவும், உபகரணங்களைப் பரிசோதிக்கவும், பாதுகாப்புச் சோதனைகள் முடிந்தவுடன் மீட்டெடுப்புப் பணிகளைத் தொடங்கவும் பொறியாளர்கள் அனுப்பப்பட்டதாக ஆணையம் உறுதிப்படுத்தியது.
அதன் படி, மின்சார வலையமைப்பை பாதுகாப்பாகவும் திறமையாகவும் மீண்டும் இயங்க வைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளின்படி, மின்சாரம் கட்டங்களாக மீட்டெடுக்கப்பட்டது. அல் மஜாஸ் பகுதியில் வசிப்பவர்கள் சில மணி நேரங்களுக்குள் மின்சாரம் திரும்பிவிட்டதாகக் கூறினர், சிலர் மூன்று மணி நேரத்திற்குள்ளேயே மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
பிராந்தியத்திலேயே மிகவும் நம்பகமான மின்சார வலையமைப்புகளைக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தில், மின்வெட்டுகள் அரிதாகவே நிகழ்கின்றன. தனிப்பட்ட தடங்கல்கள் ஏற்படும்போது, ஆட்டோமேட்டிக் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் விரைவான தொழில்நுட்பப் பதில் நடவடிக்கைகள் அவற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும், விரைவான மின்சார மீட்டெடுப்பை உறுதி செய்யவும் உதவுகின்றன என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel