ஜனவரி மாதத்தின் நடுப்பகுதி நெருங்கும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் தனது குளிர்காலத்தின் மிகவும் குளிர்ந்த காலகட்டத்தை அனுபவித்து வருகிறது. ‘ஷபத்’ (Shabat) பருவத்தின் தொடக்கத்தை குறிக்கும் இந்த பருவகாலமானது பிப்ரவரி 10 வரை 26 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பருவத்தில் நாடு முழுவதும் மிகவும் குளிர்ந்த காலநிலை நிலவும் என கூறப்படுகிறது.
இது குறித்து எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் தலைவர் இப்ராஹிம் அல் ஜர்வான் கூறுகையில், மிகவும் குளிர்ந்த நாட்கள் பொதுவாக ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கி சுமார் எட்டு நாட்களுக்கு நீடிக்கும். வளைகுடாப் பகுதியில், இந்தக் காலகட்டம் உள்ளூரில் பார்த் அல் அஸீராக் (Bard Al Aziraq) அல்லது பார்த் அல் பதீன் (Bard Al Bateen) என்று அழைக்கப்படுகிறது. இது கடுமையான குளிருடன் தொடர்புடைய ஒரு காலமாகும், குறிப்பாக பாலைவனம் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் குளிர் அதிகமாக இருக்கும் என்று விவரித்துள்ளார்.
மேலும், இந்த நாட்கள் துர் அல் சித்தின் (Durr Al Sittin) எனப்படும் ஒரு பரந்த குளிர்காலப் பகுதிக்குள் வருகின்றன என்றும், வடக்குக் காற்று வீசும்போது குளிர் இன்னும் கடுமையாக உணரப்படலாம், குறிப்பாக பிப்ரவரி 1 முதல் 12 வரை நீடிக்கும் துர் அல் தமனின் (Durr Al Thamanin) எனப்படும் மற்றொரு குளிர்காலக் கட்டத்தின் போது இது நிகழும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அல் ஜர்வான் கூற்றுப்படி, மிகக் குறைந்த வெப்பநிலை பொதுவாக ஜனவரி 12 மற்றும் ஜனவரி 25-க்கு இடையில் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது. அப்போது நாட்டின் உள் பகுதிகளில் அதிகாலை வெப்பநிலை 8°C-க்குக் கீழேயும், சில சமயங்களில் 5°C-க்குக் கீழேயும் குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷபத் பருவத்தில் வெப்பநிலையில் ஏற்படும் இந்தத் திடீர் சரிவுக்கு, சைபீரியா மற்றும் ஆர்க்டிக் பகுதியிலிருந்து வரும் குளிர்ந்த காற்றுத் திரள்களே காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் காற்றுத் திரள்கள் ஐரோப்பா வழியாகப் பயணித்து இப்பகுதியை அடைகின்றன.
ஷபத் என்பது குளிர்காலத்தின் இரண்டாவது முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது என்றும், இது கடுமையான குளிர் மற்றும் அதிக வேகமான காற்றால் குறிக்கப்படுகிறது என்றும் அல் ஜர்வான் கூறியுள்ளார். அத்துடன் ஷபத் பருவத்தின் முடிவில் குளிரின் தீவிரம் அமீரகத்தில் குறையத் தொடங்கும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel