ADVERTISEMENT

துபாயில் சொகுசு கார், 25,000 திர்ஹம் ரொக்கத்துடன் பிடிபட்ட பிச்சைக்காரர்கள்..!! துபாய் போலீஸ் விடுத்த எச்சரிக்கை.!!

Published: 13 Feb 2026, 7:24 PM |
Updated: 13 Feb 2026, 7:24 PM |
Posted By: Menaka

துபாயில் பிச்சை எடுத்ததற்காக கைது செய்யப்பட்ட ஒரு குடியிருப்பாளரிடம் மூன்று சொகுசு கார்கள் இருந்ததாகவும், மற்றொரு பிச்சைக்காரர் 25,000 திர்ஹம்ஸ்க்கும் அதிகமான பணத்தை ஒரு பாயின் கீழ் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் துபாய் காவல்துறை நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து ‘Suspects and Criminal Phenomena Department’ என்ற துறையின் இயக்குனர் பிரிகேடியர் அலி சலீம் அல் ஷம்சி அவர்கள் பேசுகையில், சிலர் பொதுமக்களின் அனுதாபத்தை குறிப்பாக ரமலானின் போது எவ்வாறு அதிக அளவில் பணம் சேகரிக்கிறார்கள் என்பதை இந்த வழக்குகள் காட்டுகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இது சம்பந்தமான ஒரு வழக்கில், மூன்று உயர் ரக வாகனங்கள் வைத்திருந்த ஒரு குடியிருப்பாளர் பிச்சை எடுத்தது தெரியவந்துள்ளது. மற்றொரு சம்பவத்தில், ஒரு ஆசிய நபர் அனுதாபம் பெறுவதற்காக தனது இரண்டு வயது குழந்தையை கையில் எடுத்துச் சென்று மசூதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் பிச்சை எடுத்தபோது பிடிபட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், அவர் விசிட் விசாவில் நாட்டிற்குள் நுழைந்து சில நாட்களுக்குள் பல்வேறு வெளிநாட்டு நாணயங்களில் சுமார் 20,000 திர்ஹம் வரை சேகரித்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் பொது வழக்குரைஞரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், சந்தையில் பொதுமக்களிடம் நன்கொடை பெறுவதற்காக பாயை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த ஒருவரை சமீபத்தில் கைது செய்த அதிகாரிகள், அவர் அந்த பாய்க்கு கீழே 25,000 திர்ஹம்ஸ் பணத்தை மறைத்து வைத்திருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.

ADVERTISEMENT

பிச்சை எடுக்க நெட்வொர்க்

சில வழக்குகளில் ஒழுங்கமைக்கப்பட்ட பிச்சை எடுக்கும் நெட்வொர்க் சம்பந்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை பிச்சை எடுக்க கட்டாயப்படுத்தியதும் அடங்கும். அவர்களில் பெரும்பாலோர் ஆசிய நாட்டினர் என்றும், சில குழந்தைகள் 13 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் பள்ளியில் சேர்க்கப்படவில்லை என்றும் குற்றவியல் மற்றும் புலனாய்வுத் துறையின் கேப்டன் அம்மார் தாரிக் கூறியுள்ளார்.

அவர்கள் அமீ்கரத்தின் சட்டப்பூர்வ குடியிருப்பாளர்களாக இருந்தபோதிலும், அவர்களின் பெற்றோர் காலை முதல் இரவு வரை பிச்சை எடுக்க கட்டாயப்படுத்தியதாகவும், இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், மாற்றுத்திறனாளிகள் உட்பட சில குடும்பங்கள், குறிப்பாக பிச்சை எடுக்க துபாய்க்கு விசிட் விசாவில் வருவதாக கூறப்படுகிறது.

அதிகாரிகளின் கடும் நடவடிக்கை

இந்நிலையில், ரமலான் மாதம் தொடங்குவதற்கு முன்னதாகவே, துபாய் காவல்துறை தங்கள் வருடாந்திர பிச்சை எடுக்கும் எதிர்ப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. மேலும் தெருவோர பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்று குடியிருப்பாளர்களையும் எச்சரித்துள்ளது. ஏனெனில், கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் புனித ரமலான் மாதத்தில் விரைவாக பணம் சேர்க்கலாம் என்ற எண்ணத்தில் வரும் பார்வையாளர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மற்ற அரசுத் துறைகளுடன் இணைந்து அதிகாரிகள் எமிரேட் முழுவதும் ரோந்துப் பணிகளையும் அதிகரித்துள்ளனர். அதேசமயம், சமூக ஊடகங்களில் பரவும் ஆன்லைன் பிச்சை எடுத்தல் மற்றும் போலி நன்கொடை பிரச்சாரங்களுக்கு எதிராகவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

2018 ஆம் ஆண்டின் 9 ஆம் எண் கூட்டாட்சி சட்டத்தின் கீழ், அமீரகத்தில் பிச்சை எடுத்தால் 5,000 திர்ஹம் அபராதம் மற்றும் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்களை நடத்துபவர்களுக்கு குறைந்தது ஆறு மாத சிறைத்தண்டனை மற்றும் 100,000 திர்ஹம் முதல் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், துபாய் காவல்துறையின் கால் சென்டர் 901, செயலியில் உள்ள போலீஸ் ஐ (police eye) அல்லது இ-கிரைம் தளம் மூலம் பிச்சைக்காரர்களைப் புகாரளிக்க குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், துபாய் காவல்துறை 1,801 பிச்சை எடுத்தல் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது, ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 206 வழக்குகள் பதிவாகியுள்ளன. இத்தகைய சுரண்டல் மற்றும் மோசடி மற்றும் குழந்தை துஷ்பிரயோகம் போன்ற தொடர்புடைய குற்றங்களைத் தடுப்பதில் சமூக விழிப்புணர்வு முக்கியமானது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel