அமீரகத்தின் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்றான ஷார்ஜா லைட் ஃபெஸ்டிவல் (Sharjah Light Festival) மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், வானுயர்ந்த கட்டிடங்கள் ஒளியால் அலங்கரிக்கப்பட்டு ஷார்ஜா எமிரேட்டின் தோற்றத்தை ஒளிகளால் பிரகாசமாக மாற்றியுள்ளது. இந்த ஃபெஸ்டிவல் பிப்ரவரி 15 வரை எமிரேட் முழுவதும் 13 இடங்களை ஒளியூட்டும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வருடாந்திர நிகழ்வு, கட்டிடங்களையும் பொது இடங்களையும் பெரிய அளவிலான ஓவியத் தளங்களாக மாற்றி, லைட் ப்ரொஜெக்ஷன்கள் மூலம் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் இயற்கை பற்றிய கதைகளை வெளிப்படுத்துகிறது.
தற்போது 15-வது பதிப்பாக நடைபெறும் இந்தத் திருவிழா, முதல் நாள் இரவில் நடைபெற்ற ட்ரோன் நிகழ்ச்சிக்குப் பிறகு, ஷார்ஜா சிட்டி , கிழக்குக் கடற்கரை, மத்திய பிராந்தியம் மற்றும் அல் ஹம்ரியா முழுவதும் ஒளி நிறுவல்களுடன் தொடர்கிறது. சுவர்கள், கட்டிட முகப்புகள் மற்றும் இயற்கை அடையாளங்கள் என அனைத்தும் கவனமாக வடிவமைக்கப்பட்ட ஒளிக் காட்சி அமைப்புகள் மூலம் உயிர்ப்பிக்கப்படுவதால் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களும் பார்வையாளர்களும் இந்த அனுபவத்தை ரசிக்க ஒன்று கூடுகின்றனர்.
இது குறித்து ஷார்ஜா வர்த்தக மற்றும் சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் காலித் ஜாசிம் அல் மிட்ஃபா அவர்கள் பேசுகையில், இந்தத் திருவிழாவை எமிரேட்டின் கலாச்சார நாட்காட்டியில் ஒரு முக்கிய நிகழ்வு என்றும், ஒவ்வொரு நிறுவல்திட்டமும் ஷார்ஜாவின் வரலாறு, மரபுகள் மற்றும் இயற்கை சூழலில் இருந்து உத்வேகம் பெற்று, அதன் அடையாளத்தைப் பிரதிபலிக்கிறது என்றும் விவரித்துள்ளார்.
பார்வையாளர்கள் காணவேண்டிய முக்கிய இடங்களுள் ஒன்று கோர்ஃபக்கான் நீர்வீழ்ச்சி ஆகும். அங்குள்ள ‘தி ஹார்ட் ஆஃப் கோர்ஃபக்கான்’ என்ற நிறுவல்திட்டம், நீர் மற்றும் பசுமை முழுவதும் பாயும் ஒளி விளைவுகள் மூலம் அந்தப் பகுதியின் கடல்சார் பாரம்பரியத்தையும் இயற்கை அழகையும் எடுத்துக்காட்டுகிறது.
மேலும், இந்த ஃபெஸ்டிவலில் உணவு, ஷாப்பிங் மற்றும் குடும்ப பொழுதுபோக்குகளை வழங்கும் ஒரு பிரத்யேகப் பகுதியான ‘லைட் வில்லேஜ்’ (ஒளி கிராமம்) இடம்பெற்றுள்ளது. இந்தப் பகுதி, சிறு வணிகங்கள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் உள்ளூர் பிராண்டுகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு பிரபலமான சந்திப்பு இடமாக திகழ்கிறது.
இவை தவிர, அல் ஹம்ரியாவில் உள்ள ஜெனரல் சூக்கில் ‘ஸ்டில் லைஃப், எடர்னல் மோஷன்’ என்ற தலைப்பிலான ப்ரொஜெக்ஷன் மேப்பிங் மூலம் வரலாறு உயிர்ப்பிக்கப்படுகிறது. முத்துக்கள் உருள்வது, பட்டு அசைவது, ஆவி பறப்பது மற்றும் சாம்பிராணி மணம் வீசுவது ஆகியவை சந்தையின் சுவர்களில் அனிமேஷன் செய்யப்பட்டு, வர்த்தகத்தின் வரலாற்று மையமாக ஷார்ஜாவின் பங்கை பிரதிபலிக்கிறது.
இந்த அனுபவம் அனைத்து வயதினருக்கும் மற்றும் அனைத்து நாட்டினருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, கடலோரத்தின் அமைதியான தருணங்கள் முதல் லைட் வில்லேஜில் உள்ள மாலைப் பொழுதுகள் வரை, ஷார்ஜா லைட் ஃபெஸ்டிவல் அனைவருக்கும் சிறந்த அனுபவத்தை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel