துபாயில் வசித்து வந்த இந்தியர் ஒருவர், புதிய வேலை கிடைத்த பிறகு ரமலான் மற்றும் ஈத் பண்டிகைக்கு தனது குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக இந்தியாவுக்கு விமானத்தில் புறப்படவிருந்த நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 39 வயதான கணக்காளர் ஃபவாஸ் சம்பந்தகத் ஹவுஸ் (Favaz Chambantagath House), ரமலான் நோன்பின் இஃப்தாருக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது லக்கேஜ்களை பேக் செய்யும் போது திடீரென சரிந்து விழுந்ததாகவும் அதனை தொடர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர், திங்கள்கிழமை அதிகாலை 3 மணி விமானத்தில் புறப்பட திட்டமிடப்பட்டிருந்ததாக அவருடைய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி இறந்தவரின் உறவினரான துபாயைச் சேர்ந்த இந்திய வழக்கறிஞர் ஹாஷிக் தாய்கண்டி கூறுகையில், “ஃபவாஸ் நோன்பை முடித்து இஃப்தாருக்கான உணவை சாப்பிட்ட பிறகு, இந்தியா செல்வதற்காக பேக் செய்யும் போது அவருக்கு உடல்நிலையில் அசௌகரியம் ஏற்படத் தொடங்கியது. அவருக்கு அதிகமாக வியர்க்கத் தொடங்கியது, பின்னர் சரிந்து விழுந்தார். அவரது நண்பர்கள் உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்து அறிவுறுத்தப்பட்டபடி CPR செய்தனர், ஆனால் மருத்துவ உதவி வருவதற்குள் அவர் இறந்துவிட்டார்” என்று சம்பவத்தை விவரித்துள்ளார்.
மேலும், ஃபவாஸுக்கு எந்த உடல்நலக் குறைபாடுகளும் இல்லை என்றும், வழக்கமான நடைப்பயிற்சி வழக்கத்தை கடைப்பிடிப்பதாகவும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறப்புக்கான காரணம் மாரடைப்பு என்று தெரிவித்துள்ளனர்.
பவாஸ் இறக்கும் போது, வேலை மாற்றத்தின் நடுவில், விசிட் விசாவில் இருந்ததாகவும், அவர் முன்பு துபாயில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த நிலையில், முந்தைய வேலை முடிந்ததும், புதிய வேலையைப் பெறுவதற்காக அவர் தனது மனைவியையும் நான்கு வயது மகனையும் கேரளாவிற்கு திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
அவர் சமீபத்தில் ஒரு புதிய வேலையை பெற்றதால், வேலைவாய்ப்பு விசாவிற்கு மாற்றும் பணியில் இருந்ததாகவும், அவரது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், புதிய பணியில் சேருவதற்கு முன்பு ரமலான் மற்றும் ஈத் பண்டிகையை தனது குடும்பத்துடன் கழிக்க வீட்டிற்குச் செல்ல முடிவு செய்ததாகவும் ஹாஷிக் தெரிவித்துள்ளார்.
அவர் உயிரிழந்த செய்தியை அறிந்ததும் கேரளாவில் அவருக்காகக் காத்திருந்த அவரது பெற்றோர், மனைவி மற்றும் இளம் மகன் ஆகியோர் மீளாத் துயரில் மூழ்கியதாகவும், அவர் உயிருடன் வீடு திரும்ப திட்டமிடப்பட்டிருந்த கிட்டத்தட்ட ஒரு நாள் கழித்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை அவரின் இறந்த உடல் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் சமூக உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel