ரமலான் மாதத்தின் போது, அமீரகம் முழுவதும் உள்ள மசூதிகள் இறை வழிபாடு மட்டுமல்லாமல், தாராள மனப்பான்மையுடனும் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு நாளும் இஃப்தார் எனும் நோன்பு திறக்கக்கூடிய நேரத்தில், ஆயிரக்கணக்கான வழிபாட்டாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் எமிரேட் முழுவதும் உள்ள மசூதிகளில் இலவச இப்தார் உணவுகளுடன் தங்கள் நோன்பை முடிக்க ஒன்று கூடுகிறார்கள்.
இந்த நீண்டகால ரமலான் பாரம்பரியம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆழமான வேரூன்றிய தர்மம், சமூக உணர்வு மற்றும் வீட்டை விட்டு வெளியே இருப்பவர்களைப் பராமரித்தல் ஆகியவற்றின் மதிப்புகளை பிரதிபலிக்கிறது.
இந்த எளிய உணவுகளுக்குப் பின்னால் அவற்றைத் தயார் செய்து பேக் செய்வது போன்ற ஒரு பெரிய செயல்பாடு உள்ளது .
அதாவது, அமீரகத்தின் முக்கிய மசூதியான அபுதாபியின் ஷேக் சையத் கிராண்ட் மசூதியின் முற்றங்களில் மக்ரிப் தொழுகைக்கான நேரத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, அபுதாபி முழுவதும் உள்ள பெரிய தொழில்துறை சமையலறைகளுக்குள் பரபரப்பான காட்சி வெளிப்படுகிறது.

அங்கே, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சரியான ஒருங்கிணைப்பில் சமையலில் ஈடுபடுகின்றனர். ரமலானின் போது ஒவ்வொரு நாளும் 95,000 இப்தார் உணவுகளை சமைத்தல், பேக்கிங் செய்தல் மற்றும் அனுப்புதல் என பரபரப்பாக வேலை பார்க்கின்றனர்.
கிராண்ட் மசூதிக்கு மட்டுமல்ல, ஷேக் கலீஃபா மசூதி மற்றும் எமிரேட் முழுவதும் உள்ள பல தொழிலாளர் தங்குமிடங்களுக்கும் உணவு தயாரிக்கும் பாரிய நடவடிக்கைகள் நம்மை பிரம்மிக்கச் செய்கின்றன. ரமலான் மாதத்தின் போது, இந்த முயற்சி சுமார் 2.66 மில்லியன் உணவுகளை விநியோகிப்பதாகக் கூறப்படுகிறது.

2004 முதல் ஒரு ரமலான் பாரம்பரியம்
2004 முதல் மறைந்த ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் ஆதரவின் கீழ் ஆண்டுதோறும் இயங்கி வரும் இந்த முயற்சி ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டகால தாராள மனப்பான்மை மற்றும் சமூக ஆதரவின் மதிப்புகளை பிரதிபலிக்கிறது என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
24 மணி நேர செயல்பாடு
இது தொடர்பாக ஏற்பாட்டாளர்கள் அளித்துள்ள தகவலின் படி, இந்த உணவு பரிமாறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு தயாரிப்பு தொடங்குகிறது. ஆயிரக்கணக்கான கிலோகிராம் கோழி இறைச்சி ஊறவைக்கப்படுகிறது, காய்கறிகள் நறுக்கப்படுகின்றன, அரிசி துல்லியமாக அளவிடப்படுகிறது.
ஊழியர்கள் அதிகாலை 5 மணிக்கு அரிசிக்கு மசாலா கலவைகளைத் தயாரித்து, புதிய சாலட் பொருட்களை வெட்டுகின்றனர், பின்னர் காலை 8 மணிக்குள், தொழில்துறை அடுப்புகள் மற்றும் பெரிய பாத்திரங்களுடன் சமையல் வேலை தொடங்குகின்றன. காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை சமையல்காரர்கள் வெவ்வேறு தொகுதிகளாக அரிசி மற்றும் கோழியை சமைக்கிறார்கள். அதன் பிறகு, ஒவ்வொரு பெட்டியிலும் அரிசி, வறுத்த கோழி, பருப்புடன் கூடிய காய்கறி சலோனா, சாலட், பேரீச்சம்பழம், லாபன், தண்ணீர் மற்றும் ஒரு புதிய ஆப்பிள் ஆகியவற்றை கவனமாக நிரப்பி பேக் செய்கின்றனர்.
இறுதியாக, பிற்பகல் 3.30 மணிக்கு, லாரிகள் வெளியே வரிசையில் நிற்கத் தொடங்குகின்றன. வழிபாட்டாளர்கள் தங்கள் நோன்பை முடிக்க சரியான நேரத்தில் உணவு சென்றடைவதை உறுதிசெய்ய சூரிய மறைவிற்கு சற்று முன்பு வரை விநியோகங்கள் தொடரும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த முயற்சிக்குப் பின்னால் உள்ள அளவுகோல்
ஒரே நாளில், சமையலறைகள் பின்வருவனவற்றைப் பயன்படுத்துகின்றன:
- 30,000 கிலோ கோழி
- 15,000 கிலோ ஆடு
- 15,000 கிலோ அரிசி
- 15,000 கிலோ புதிய காய்கறிகள்
- 2,500 கிலோ பருப்பு
- 750 கிலோ மசாலாப் பொருட்கள்
- 130 லிட்டர் எண்ணெய்.
அவர்களின் கூற்றுப்படி, சமையல்காரர்கள், பேக் செய்பவர்கள், சுகாதாரக் குழுக்கள் மற்றும் ஓட்டுநர்கள் உட்பட 2,000 க்கும் மேற்பட்டோர் இந்த நடவடிக்கைக்கு பங்களிக்கின்றனர். மேலும், 150 லாரிகள் கொண்ட ஒரு குழு, அபுதாபி, அல் அய்ன் மற்றும் புஜைரா முழுவதும் சரியான நேரத்தில் டெலிவரி செய்வதை உறுதி செய்கிறது.
இந்த செயல்முறை முழுவதும் கடுமையான சுகாதார சோதனைகள், வெப்பநிலை கண்காணிப்பு மற்றும் தர ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷேக் சையத் கிராண்ட் மசூதிக்குள் சூரிய மறைவில் வழிபாட்டாளர்கள் கூடும்போது, நேர்த்தியாக பேக் செய்யப்பட்ட இப்தார் பெட்டிகள் அவர்களுக்காகக் காத்திருக்கின்றன.
பலருக்கு, இது ஒரு எளிய உணவாகும். ஆனால் அதன் பின்னால், டன் கணக்கில் உணவில் அளவிடப்பட்டு, நிமிடத்திற்கு நிமிடம் ஒதுக்கப்பட்ட, 24 மணி நேரமும் செய்யப்படும் ஒரு முயற்சி உள்ளது. அத்துடன் நோன்பு இருப்பவர்கள் எவரும் சூடான உணவு இல்லாமல் நோன்பை முறிக்கக்கூடாது என்பதை உறுதிசெய்யும் நோக்கத்தால் இது இயக்கப்படுகிறது என்றும் ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு குறித்த நேரத்தில் இந்த இஃப்தார் உணவு வழங்கும் நடைமுறையானது ஒவ்வொரு வருடமும் நம் எல்லோரையும் ஆச்சரியத்தில் தொடர்ந்து ஆழ்த்தி வருகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel