ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவிய நிலையற்ற வானிலை மற்றும் ஒரு பெரிய நிலச்சரிவு காரணமாக பல வாரங்களாக மூடப்பட்டதற்கு பிறகு, நாட்டின் மிக உயரமான சிகரமான ஜெபல் ஜெய்ஸ், பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் பார்வையாளர்களை வரவேற்கிறது.
குளிர்ந்த வெப்பநிலை குடியிருப்பாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் மலைகளுக்குத் திரும்புமாறு ஈர்க்கும் வேளையில் இந்த இலக்கு திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாலைப் பாதுகாப்பு, கூட்ட மேலாண்மை மற்றும் நீண்ட கால பழுதுபார்ப்புகளுக்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிப்பதால், தற்போது பார்வையாளர்களுக்கான அனுமதி கவனமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, தற்போது உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவுகள் அல்லது 10 திர்ஹாம் மதிப்புள்ள காட்சிக் கோபுர நுழைவுச்சீட்டுகளை (viewing deck ticket) வைத்திருக்கும் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
அணுகல் ஏன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது?
கடுமையான வானிலை மற்றும் ஒரு பெரிய நிலச்சரிவு காரணமாக ஜெபல் ஜெய்ஸ் சில வாரங்களாக மூடப்பட்டது. இந்த நிலச்சரிவு சாலையின் செங்குத்தான ஒரு பகுதிக்கு சேதத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து தற்போது 1484 பை புரோ உணவகம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஈர்ப்புகளுக்கு அல்லது ஜிப்லைன் போன்ற செயல்பாடுகளுக்கு உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவு செய்த பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என்று தகவல் அளித்துள்ளார்.
முன்பதிவு செய்யாத பார்வையாளர்கள், பாதுகாப்புச் சாவடியில் 10 திர்ஹம் செலுத்தி காட்சித் தளப் பூங்கா (Viewing Deck Park) நுழைவுச்சீட்டை வாங்குவதன் மூலம் மலைக்குச் செல்லலாம், அவர்கள் இடவசதி மற்றும் சாலை நிலைமைகளுக்கு உட்பட்டு, பாதுகாப்புச் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்லலாம் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
“மேலும் சேதங்களைத் தவிர்ப்பதற்கும் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் வாகனங்களின் எண்ணிக்கையை நிர்வகிப்பது முக்கியம்” என்று செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
பழுதுபார்க்கும் பணிகள்
கடந்த வாரம் செய்யப்பட்ட ஒரு அறிவிப்பைத் தொடர்ந்து, ஜனவரி 31 அன்று மலைக்கான அணுகல் மீண்டும் தொடங்கியது. திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட முந்தைய மூடல்களை விட பெரிய சவாலாக இருந்த இந்த நிலச்சரிவுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பகுதியை நிலைப்படுத்தவும் நீண்ட கால பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகள் அரசு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இப்போதைக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடு அறிவிக்கப்படாத நிலையில், வரும் வாரங்களில், ரமலான் மாத இறுதிக்குள் முழுமையான அணுகல் மீட்டெடுக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைவரின் பாதுகாப்புதான் தங்களின் முதன்மை முன்னுரிமை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெபல் ஜெய்ஸ், ராஸ் அல் கைமாவின் மிகவும் பிரபலமான குளிர்கால சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. சமீபத்திய நிலவரப்படி, தற்காலிக அணுகல் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால், பார்வையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவுகளைச் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel