அமீரகத்தில் வசித்து வரும் இந்தியரை காண அவரது மனைவியும் 22 மாத குழந்தையும் விசிட்டில் வந்திருந்த சமயத்தில், ஷார்ஜாவில் கடந்த புதன்கிழமையன்று நடந்த சாலை விபத்தில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை கடுமையான துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த ஷெராஃபுதீன் மற்றும் சஃப்னா தம்பதியினரின் ஒரே மகன் ஆலன் ரூமி புதன்கிழமை மாலை வாகனம் மோதியதில் உள் காயங்களுக்கு ஆளானதாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.
ஷார்ஜா காவல்துறையின் கூற்றுப்படி, இரவு 7 மணிக்குப் பிறகு குழந்தை தனது தாயுடன் குடும்பத்தின் அடுக்குமாடி கட்டிடத்திற்கு வெளியே இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தபோது, அவர் அருகில் இருந்த குழந்தை திடீரென சாலையை நோக்கி ஓடியதாக கூறப்படுகின்றது.
அதேசமயம், அப்பகுதியில் வாகனம் ஓட்டி வந்த பக்கத்து வீட்டுக்காரரால் சரியான நேரத்தில் நிறுத்த முடியாமல் போகவே, கார் குழந்தை மீது மோதியுள்ளது. உடனடியாக, அந்த குழந்தை ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இருப்பினும் மருத்துவர்களால் அக்குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.
இதனையடுத்து சட்டப்பூர்வ சம்பிரதாயங்களை முடித்த பிறகு, வியாழக்கிழமை துபாயில் உள்ள அல் குசைஸ் கல்லறையில் குழந்தை அடக்கம் செய்யப்பட்டது. குழந்தையின் இறப்பால் துக்கத்தில் இருந்த பெற்றோர்கள் இந்தியா திரும்பியுள்ளதாகவும் குடும்ப நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகள் தொடர்வதால் விபத்தில் தொடர்புடைய ஓட்டுநர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார் என்பதை ஷார்ஜா காவல்துறை உறுதிப்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க குடியிருப்புப் பகுதிகளில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பெற்றோர்கள் மற்றும் ஓட்டுநர்களை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil WhatsApp Channel