ADVERTISEMENT

துபாயில் திறக்கப்பட்டுள்ள பெரிய புதிய பாலம்: ஷேக் சையத் சாலையில் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும் என RTA தகவல்!!

Published: 27 Feb 2026, 9:13 PM |
Updated: 27 Feb 2026, 9:13 PM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஷேக் சையத் சாலையை ஷேக் கலீஃபா பின் சையத் ஸ்ட்ரீட்டுடன் இணைக்கும் ஒரு பெரிய புதிய பாலம் திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாலம் திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, எமிரேட்டின் மிகவும் பரபரப்பான பாதைகளில் ஒன்றான இந்த பாதையை பயன்படுத்தும் பயணிகளின் பயண நேரம் வெகுவாகக் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

RTA வெளியிட்டுள்ள விபரங்களின் படி, சுமார் 1,000 மீட்டர் நீளமுள்ள, இருவழிப் பாலமானது ஒரு மணி நேரத்திற்கு 3,000 வாகனங்களை அனுமதிக்கிறது மற்றும் இந்த பாதையில் பயண நேரத்தை ஆறு நிமிடங்களிலிருந்து ஒரு நிமிடமாகக் குறைக்கிறது என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், புதிய இணைப்பு அல் கராமா மற்றும் தேரா போன்ற பரபரப்பான குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்கான அணுகலை மேம்படுத்துவதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது வேர்ல்ட் ட்ரேட் சென்டர் ரவுண்டானா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட மூன்றாவது பாலம் ஆகும். இந்த ரவுண்டானா ஐந்து முக்கிய சாலைகள் சந்திக்கும் ஒரு முக்கிய சந்திப்பாகும், இது நகரத்தின் மிக முக்கியமான போக்குவரத்து புள்ளிகளில் ஒன்றாகும். முன்னதாக, செகண்ட் டிசம்பர் ஸ்ட்ரீட்டிலிருந்து ஷேக் ரஷீத் ஸ்ட்ரீட் மற்றும் அல் மஜ்லிஸ் ஸ்ட்ரீட் நோக்கி போக்குவரத்தை எளிதாக்க இம்மாதத்தின் தொடக்கத்தில் (பிப்ரவரி 2026) இரண்டு பாலங்கள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது குறித்து RTA-வின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவரும், இயக்குநர் ஜெனரலுமான மட்டார் அல் தாயர் அவர்கள் கூறுகையில், இந்த திட்டம் துபாயின் மிக முக்கியமான சாலை மேம்பாடுகளில் ஒன்றாகும். கட்டுமானப் பணிகள் 60 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவடைந்துள்ளன, மேலும் இரண்டு கூடுதல் பாலங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. இவை 2026 அக்டோபரில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

அதிகாரியின் கூற்றுப்படி, ஐந்து பாலங்களும் நிறைவடைந்தவுடன், இன்டர்செக்ஷனில் சராசரி காத்திருப்பு நேரம் 12 நிமிடங்களிலிருந்து வெறும் 90 வினாடிகளாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 92 சதவீதம் குறைப்பு ஆகும்.

ADVERTISEMENT

முழு திட்டத்தில் பின்வருவன அடங்கும்:

  • மொத்தம் 5,000 மீட்டர் நீளம் கொண்ட ஐந்து பாலங்கள்
  • மணிக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களைக் கையாளும் திறன்
  • தற்போதுள்ள ரவுண்டானாவை சிக்னல் செய்யப்பட்ட இன்டர்செக்ஷனாக மாற்றுதல்

இந்த மேம்படுத்தல் திட்டங்கள் அனைத்தும் செகண்ட் டிசம்பர் 2 ஸ்ட்ரீட், ஷேக் ரஷீத் ஸ்ட்ரீட் மற்றும் முக்கிய வணிக மாவட்டங்களை நோக்கிய இயக்கங்கள் உட்பட பல திசைகளில் சீரான போக்குவரத்து ஓட்டத்தை அனுமதிக்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இந்த திட்டம் 500,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சேவை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது துபாய் வேர்ல்ட் ட்ரேட் சென்டர் மற்றும் துபாய் இன்டர்நேஷனல் பைனான்சியல் சென்டர் போன்ற முக்கிய இடங்களுடனும், ஜபீல், அல் சத்வா, அல் கராமா, அல் ஜஃபிலியா மற்றும் அல் மன்கூல் உள்ளிட்ட குடியிருப்பு சமூகங்களுடனும் இணைப்பை மேம்படுத்துகிறது.

எனவே, தினசரி பயணிகளுக்கு, குறுகிய பயண நேரங்கள் மற்றும் சீரான போக்குவரத்து ஓட்டம் போன்ற பலன்கள் கிடைக்கும். அதேசமயம், மத்திய துபாயில் உள்ள வணிகங்களும் மேம்பட்ட சாலை அணுகலால் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மீதமுள்ள பாலங்களின் பணிகள் திட்டமிட்டபடி முன்னேறி வருவதாகவும், அக்டோபர் 2026 இல் முழுமையாக நிறைவடையும் என்றும் RTA உறுதிப்படுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel