கத்தாரில் வசிக்கும் 38 வயதான வினோத் அன்பரசன் என்ற தமிழர், அபுதாபியில் நடத்தப்படும் பிக் டிக்கெட்டில் 50,000 திர்ஹம் பரிசை வெல்லும் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு வழங்கப்படும் பிக் டிக்கெட் பரிசை தனது மகளுக்கு ஒரு மறக்க முடியாத தருணமாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
19 ஆண்டுகளாக கத்தாரில் வசித்து வரும் எலெக்ட்ரிக்கல் சூப்பர்வைசரான வினோத், தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒரு டிக்கெட் வாங்கி, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பிக் டிக்கெட்டில் தனது அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து வருவதாகக் கூறியுள்ளார். இப்படியான சூழலில், பிப்ரவரி 1 ஆம் தேதி அவருக்கு வெற்றிக்கான அழைப்பு வந்தபோது, அவரது விடாமுயற்சிக்கு இறுதியாகப் பலன் கிடைத்ததை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இத்தருணம் குறித்து மனம் திறந்த வினோத், “முதலில், என்னால் அதை உண்மையாகவே நம்ப முடியவில்லை, சற்றுத் தயங்கினேன், ஆனால், நேரலை ஒளிபரப்பில் என் பெயர் தோன்றியதைக் கண்டபோது, அது உண்மை என்று தெரிந்துகொண்டேன். அப்போதுதான் அது எனக்கு முழுமையாகப் புரிந்தது” என்று தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார்.
மேலும், இந்த வெற்றி அவருக்கும் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்று கூறிய அவர் “என் வாழ்க்கையில் இதுபோன்று நான் எதையும் வென்றது இதுவே முதல் முறை. நான் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தேன், அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகும்” என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.
வினோத் அந்தப் பரிசை தனது நண்பர்களுடன் சமமாகப் பிரித்துக்கொள்ளப் போவதாகக் கூறியதுடன், தனது பங்கிலிருந்து, ஒரு தொகையை மீண்டும் பிக் டிக்கெட்டில் முதலீடு செய்யவும், மீதமுள்ள ஒரு பகுதியை தனது மகளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளிப்பதற்காகச் சேமிக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வினோத் கூறியதாவது: “இந்த வெற்றியை அவளுக்கு மறக்க முடியாததாக மாற்ற விரும்புகிறேன், இது எனது முதல் வெற்றி என்பதால், என் மகளுக்கு ஒரு சிறப்பு விருந்து அளிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று உணர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய வினோத், “நம்பிக்கையை இழக்காதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், உங்கள் அதிர்ஷ்டம் எப்போது வேண்டுமானாலும் மாறலாம்” என்று சக பங்கேற்பாளர்களுக்கு ஒரு செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.
அமீரகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பிக் டிக்கெட், பங்கேற்பாளர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. மேலும் பலரின் கனவுகளை நனவாக்க உதவும் வகையில் சிறப்பு மாதாந்திர ப்ரோமோஷன்களையும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil WhatsApp Channel