புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகம் தனியார் துறை ஊழியர்களுக்கான குறைக்கப்பட்ட வேலை நேரங்களை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமீரகத்தின் மனிதவளம் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) வெளியிட்டுள்ள அறிக்கையில், ரமலான் முழுவதும் தனியார் துறை ஊழியர்களின் தினசரி வேலை நேரம் இரண்டு மணிநேரம் குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஊழியர்கள் குறைக்கப்பட்ட தினசரி வேலை நேரத்தை மீறாமல், நிறுவனங்கள் தங்கள் வணிகத்தின் தன்மையைப் பொறுத்து நெகிழ்வான அல்லது தொலைதூர வேலை ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தலாம் என்றும் MoHRE தெரிவித்துள்ளது. மேலும், சுருக்கப்பட்ட அட்டவணையைத் தாண்டி செய்யப்படும் எந்தவொரு வேலையும் கூடுதல் நேரமாகக் கருதப்படும் மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஊழியர்கள் வழக்கமாக ஒரு நாளைக்கு எட்டு முதல் ஒன்பது மணிநேரம் வரை வேலை செய்யும் நிலையில், அவர்களின் அட்டவணைகள் இப்போது அதற்கேற்ப குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், பொதுத்துறை ஊழியர்களும் குறைக்கப்பட்ட கால அட்டவணையைப் பின்பற்றுவார்கள். திங்கள் முதல் வியாழன் வரை, அரசு ஊழியர்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை வேலை செய்வார்கள், வெவ்வேறு மணிநேரங்கள் தேவைப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ரமலான் மாதத்தில் குடியிருப்பாளர்கள் குடும்பம், பிரார்த்தனை மற்றும் சிந்தனைக்கு அதிக நேரத்தை வழங்குவதற்காக குறுகிய வேலை நாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. நோன்பு கடைபிடிக்கும் முதல் சில நாட்கள் சவாலானதாக இருந்தாலும், குறைக்கப்பட்ட நேரங்கள் பெரும்பாலும் ஊழியர்கள் அதிக கவனம் செலுத்தவும் ஒழுங்கமைக்கவும் உதவுகின்றன, இதனால் உற்பத்தித்திறன் மேம்படும் என்று மனிதவள நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரமலான் எப்போது தொடங்கும்?
ரமலானின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை நிலவு பிப்ரவரி 17 அன்று காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வானியல் கணக்கீடுகள் அந்த நாளில் பிறை தெரிவது சாத்தியமில்லை என்பதைக் குறிக்கிறது.
இஸ்லாமிய மாதங்கள் பிறை பார்ப்பதைப் பொறுத்து 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும் என்பதால், புதன்கிழமை ஷாபானின் 30 நாட்களை நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பெரும்பாலான நாடுகளில் ரமலான் வியாழக்கிழமை, பிப்ரவரி 19 அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel