ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி எமிரேட்டானது, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகனப் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தவும், முகமது பின் சையத் சிட்டியின் முக்கிய வணிகப் பகுதிகளில் ஏப்ரல் 6, 2026 முதல் புதிய கட்டண பார்க்கிங் முறையை அமல்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தின் (ITC) மேற்பார்வையின் கீழ், ‘Q Mobility’ நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியானது, வாகன நிறுத்தங்களை முறைப்படுத்தவும், சாலைப் பயனாளர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தவும் இலக்கு கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பார்க்கிங் கட்டணங்கள் மற்றும் கட்டணம் செலுத்தும் முறைகள்
பார்க்கிங் இடங்களில் வாகனங்களை நிறுத்தும் ஓட்டுநர்களிடமிருந்து மணிக்கு 2 திர்ஹம்ஸ் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணங்களை பின்வரும் வழிகளில் செலுத்தலாம்:
- Darb மற்றும் TAMM செயலிகள் (Apps) மூலம்
- SMS சேவைகள் மூலம்
- பார்க்கிங் இடத்தில் உள்ள கட்டணம் செலுத்தும் இயந்திரங்கள் மூலம்
மேலும், இந்தக் கட்டண முறை ஆரம்பத்தில் வணிகப் பிரிவுகளான ME10 மற்றும் ME11பகுதிகளிலும், வில்லா (Villa) மண்டலங்களான Z17-01, Z19, Z20 மற்றும் Z27 ஆகியவற்றிற்குள் அமைந்துள்ள முக்கிய ஸ்ட்ரீட்களிலும் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அருகிலுள்ள குடியிருப்பு (வில்லா) பகுதிகளில் பார்க்கிங் செய்வதற்கு அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே என வரையறுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது, இது அப்பகுதியில் வசிக்கும் மக்களின் தனிமையைப் பாதுகாக்கவும், பார்க்கிங் இடங்களைச் சிறப்பாக ஒழுங்கமைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள்
இந்த நடவடிக்கை, நீண்ட காலமாக நிலவி வரும் பார்க்கிங் இடப் பற்றாக்குறை, முறைசாரா மற்றும் அங்கீகரிக்கப்படாத வாகன நிறுத்தம் மற்றும் வணிகச் செயல்பாடுகள் காரணமாக ஏற்படும் அன்றாடத் தீவிரப் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கம் கொண்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பார்க்கிங் இடங்களை முறைப்படுத்துவதன் மூலம், உள்ளூர் வணிகங்களுக்கு ஆதரவளிப்பதோடு, கடைகள் மற்றும் சேவைகளை அணுகுவதை எளிதாக்குவதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்னதாகவே, அதிகாரிகள் ME9, ME10 மற்றும் ME12 ஆகிய பகுதிகளில் நான்கு பல அடுக்கு பார்க்கிங் கட்டிடங்களைத் திறந்துள்ளனர். இவை மொத்தம் 1,446 பார்க்கிங் இடங்களை வழங்குகின்றன; இதில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கான பிரத்யேக இடங்களும் அடங்கும்.
மொத்த வாகன நிறுத்தத் திறன்
முகமது பின் சையத் சிட்டியின் வணிகப் பகுதிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களும் பார்வையாளர்களும் பயணம் செய்வதால், அங்கு தினசரி வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்த புதிய கட்டண முறை மொத்தம் 11,030 வாகன நிறுத்த இடங்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றின் விவரங்கள்:
- ME10: 6,666 இடங்கள்
- ME11: 3,758 இடங்கள்
- Z17-01: 431 இடங்கள்
- Z19: 108 இடங்கள்
- Z20: 67 இடங்கள்
வாகன நிறுத்த மேலாண்மையை மேம்படுத்துதல், போக்குவரத்து நெரிதலைக் குறைத்தல் மற்றும் அபுதாபியின் ‘ஸ்மார்ட் மற்றும் நிலையான நகர்ப்புறப் போக்குவரத்து அமைப்பு’ குறித்த தொலைநோக்குத் திட்டத்திற்கு வலுசேர்த்தல் ஆகிய பரந்த உத்திகளின் ஒரு பகுதியாகவே இத்திட்டம் அமைந்துள்ளது என்று ‘Q Mobility’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel