துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமும், துபாய் காவல்துறையும் இணைந்து, மறு அறிவிப்பு வரும் வரை, துபாய் முழுவதும் 24 மணி நேரமும் டிரக்குகள் இயங்க அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளன.
இந்த நடவடிக்கையானது, குறிப்பாக அதிகரித்த தேவை மற்றும் பிராந்திய சவால்கள் நிறைந்த இக்காலகட்டத்தில், சரக்கு போக்குவரத்துத் துறைக்கு ஆதரவளிப்பதையும், தடையற்ற விநியோகச் சங்கிலி செயல்பாடுகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இருப்பினும், துபாய் ஏர்போர்ட் டன்னல் மற்றும் அல் ஷிந்தகா காரிடார் ஆகியவை இந்த முடிவிலிருந்து விலக்கப்பட்டுள்ளன என்றும், பாதுகாப்பையும் போக்குவரத்து ஓட்டத்தையும் பராமரிப்பதற்காக போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
வணிக நடவடிக்கைகளை அதிகரிக்கவும், துபாயின் சரக்கு போக்குவரத்து தயார்நிலையை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்படும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், இது போக்குவரத்து நிறுவனங்கள் மிகவும் திறமையாக செயல்பட வழிவகுக்கும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், லாரி ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் பின்வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:
- அனைத்து போக்குவரத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றவும்
- அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும்
- எல்லா நேரங்களிலும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும்
இந்த முன்னெடுப்பு, பாதுகாப்பான மற்றும் திறமையான சாலை வலையமைப்புகளைப் பராமரிக்கும் அதே வேளையில், சரக்குகள் தடையின்றி நகர்வதை உறுதி செய்வதில் துபாயின் கவனத்தைப் பிரதிபலிக்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel