ADVERTISEMENT

நிதி மையங்கள் மீது தாக்குதல் எச்சரிக்கை விடுத்த ஈரான்..!! போரை முடிவுக்குக் கொண்டுவர 3 நிபந்தனைகள் விதிப்பு..!!

Published: 12 Mar 2026, 5:39 PM |
Updated: 12 Mar 2026, 5:41 PM |
Posted By: Menaka

மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடன் தொடர்புடைய பொருளாதார மற்றும் நிதி மையங்கள் அடுத்த தாக்குதலுக்கு இலக்குகளாக மாறக்கூடும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. அதே நேரத்தில், நடந்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நிறைவேற்றப்பட வேண்டிய மூன்று முக்கிய நிபந்தனைகளையும் தெஹ்ரான் முன்வைத்துள்ளது.

ADVERTISEMENT

ஈரானின் அரசுக்குச் சொந்தமான முக்கிய வங்கிகளில் ஒன்றான ‘Bank Sepah’ உடன் தொடர்புடைய மையங்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு, அண்டை நாடுகளில் உள்ள பொருளாதாரக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் தங்கள் பதிலடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமையக்கூடும் என்று ஈரானிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தத் தாக்குதலை அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டமிட்டு அரங்கேற்றியதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியதுடன், பிராந்தியத்தில் இவ்விரு நாடுகளுடனும் தொடர்புடைய பொருளாதார மற்றும் வங்கி சார்ந்த இடங்கள் இனி இலக்கு வைக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

இவ்வாறு இரு நாடுகளுக்கு இடையேயான மோதலானது இராணுவ தளங்களுக்கு அப்பால், நாட்டின் உள்கட்டமைப்பு மீதான தாக்குதலாக விரிவடைவதால், சாத்தியமான தாக்குதல் இலக்குகளாக கருதப்படும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை விட்டு விலகியிருக்குமாறு பொதுமக்களை ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்பு படையினர் நேற்று அறிவித்தனர்.

மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் விதித்த மூன்று நிபந்தனைகள்

ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான தாக்குதல் நாளுக்கு நாள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், பின்வரும் மூன்று முக்கிய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், இந்த போரானது முடிவுக்கு வரக்கூடும் என்று ஈரானியத் தலைமை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
  1. சர்வதேச அளவில் ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரித்தல்.
  2. ஈரானிய பிரதேசத்தின் மீதான தாக்குதல்களால் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல்.
  3. எதிர்காலத்தில் ஈரான் மீது நடத்தப்படக்கூடிய ஆக்கிரமிப்புகளைத் தடுக்க சர்வதேச உத்தரவாதங்கள்.

நாட்டின் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த கோரிக்கைகள் அவசியம் என்று ஈரானிய அதிகாரிகள் தெரிவித்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.

பொருளாதார தாக்கம் குறித்த கவலைகள்

இந்த மோதல் ஏற்கனவே உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி சந்தைகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, வளைகுடாப் பகுதி முழுவதும் கப்பல் போக்குவரத்துப் பாதைகளிலும் வணிகச் செயல்பாடுகளிலும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், பொருளாதார மண்டலங்கள் அல்லது நிதிசார் கட்டமைப்புகளை இலக்கு வைப்பது போரை வெகுவாகத் தீவிரப்படுத்தக்கூடும் என்றும், அதன் விளைவுகள் நாடு முழுவதும் பொருளாதாரத் தாக்கத்தை மேலும் விரிவுபடுத்தக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இவ்வாறு நாளுக்கு நாள் மத்திய கிழக்கில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த மோதல் மேலும் விரிவடையுமா அல்லது பேச்சுவார்த்தைகளை நோக்கி நகருமா என்பதைத் தீர்மானிப்பதில் வரக்கூடிய நாட்கள் மிக முக்கியமானவையாக அமையும் என்று போரை நிறுத்த தொடர்ந்து வலியுறுத்தி வரும் பல நாடுகளின் தலைவர்களும் கருத்து தெரிவுத்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel