ADVERTISEMENT

“புயல் அல்ல” அமீரகத்தில் தற்போதைய வானிலைக்கு குறைந்த காற்றழுத்த மையமே காரணம் என வானிலை நிபுணர்கள் தகவல்…

Published: 26 Mar 2026, 8:18 PM |
Updated: 26 Mar 2026, 8:18 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தைப் பாதித்து வரும் தற்போதைய வானிலை அமைப்பு ஒரு புயல் அல்ல என்றும், இணையத்தில் பரவி வரும் வதந்திகள் அறிவியல் ரீதியாகத் தவறானவை என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த வாரம் முழுவதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், இந்த வானிலை அமைப்பு ஒரு புயலுக்கான வரையறைகளை பூர்த்தி செய்யவில்லை என்று NCM-இன் வானிலை நிபுணரான டாக்டர் அகமது ஹபீப் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “ஒரு சூறாவளி என்பது பரந்த பகுதிகளில் வீசும் வலுவான மற்றும் தொடர்ச்சியான காற்றைக் குறிக்கும், இது பெரும்பாலும் பரவலான சேதத்தை ஏற்படுத்தும். ஆனால், நாம் தற்போது அனுபவித்துக் கொண்டிருப்பது, வெப்பச்சலன மேகக் கூட்டங்களுடன் தொடர்புடைய, ஒப்பீட்டளவில் ஆழமான ஒரு குறைந்த காற்றழுத்த அமைப்பின் நீட்சியாகும்” என்று விவரித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த வானிலைக்கு உண்மையில் என்ன காரணம்?

NCM-இன் கூற்றுப்படி, தற்போதைய வானிலை நிலவரங்கள் வடமேற்கு திசையிலிருந்து நகர்ந்து வரும் ஒரு குறைந்த காற்றழுத்த நீட்சியால் உந்தப்படுகின்றன, இது இப்பகுதிக்குள் கணிசமான ஈரப்பதத்தைக் கொண்டு வருகிறது. இது வெப்பச்சலன மேகங்கள் உருவாக வழிவகுத்துள்ளது. இதன் விளைவாக இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை போன்றவை நிகழ்கின்றன என்பது தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி, தற்போது, நாட்டின் வானிலையில் காணப்படும் சீரற்ற மற்றும் குறிப்பிட்ட உள்ளூர் பகுதிகளுக்குள் மட்டும் வீசும் காற்றின் போக்குகள், இது ஒரு புயல் அல்ல என்பதை மேலும் உறுதிப்படுத்துவதாக நிபுணர்கள் குறிப்பிட்டனர். ஏனெனில், சூறாவளியின் போது காற்றானது பொதுவாகப் பரந்த பகுதிகளில் சீராகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் விளக்குகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் மழை

கடந்த வாரயிறுதி முதல் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன் மற்றும் ராஸ் அல் கைமா உள்ளிட்ட பல அமீரகங்களில் மழை பெய்துள்ளது. பின்னர் இந்த மழை அல் அய்ன் போன்ற உள்நாட்டு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளது.

இறுதிக்கட்ட மழையானது மேற்குப் பகுதிகளில் தொடங்கி, அதிகாலையில் அல் தஃப்ரா மற்றும் அபுதாபி பகுதிகளுக்கு நகர்ந்து, பின்னர் பகல் பொழுதில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்குப் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை, இடி, மின்னல் மற்றும் ஆங்காங்கே சிறிய அளவிலான ஆலங்கட்டி மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

வானிலை விரைவில் சீரடையும்

இந்த வானிலை அமைப்பு படிப்படியாக வலுவிழக்கும் என்றும், தீவுகள் மற்றும் வடக்கு பகுதிகளில் அவ்வப்போது லேசானது முதல் மிதமானது வரையிலான மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் NCM தெரிவித்துள்ளது. மேலும், வரும் நாட்களில் மேகமூட்டம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, வடமேற்கு திசையிலிருந்து குறிப்பாக கடற்பகுதிகளில் வீசும் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இது குளிர்ந்த வெப்பநிலையைக் கொண்டுவருவதுடன், சில பகுதிகளில் புழுதிப் புயல் மற்றும் குறைந்த அளவிலான பார்வைத்திறன் குறைபாட்டையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அரபிக்கடல் மற்றும் ஓமன் கடல் ஆகிய இரு பகுதிகளிலும் கடல் சீற்றத்துடன் காணப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்

ஆகவே, பொதுமக்கள் அதிகாரப்பூர்வமான வானிலை அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறும், வானிலை குறித்துத் தவறான அல்லது மிகைப்படுத்தப்பட்ட தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். வானிலை நிலைமைகள் சில சமயங்களில் தீவிரமாக இருந்தாலும், அவை பருவகால நிலையற்ற தன்மையின் ஒரு பகுதியே தவிரச் சூறாவளி அல்ல என்றும், அவை மிக உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel