கிட்டத்தட்ட நான்கு வாரங்களாக அமெரிக்கா, இஸ்ரேல் உடனான ஈரான் மோதல் நீடிக்கும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள், மார்ச் 21 அன்று ஈரானிலிருந்து ஏவப்பட்ட மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் எட்டு ஆளில்லா விமானங்களை (drones) இடைமறித்து அழித்ததாக, நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானின் ஏவுகணை தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மொத்தம் 341 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,748 ட்ரோன்களை எதிர்கொண்டுள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மூன்று வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இத்தாக்குதல்கள் காரணமாக, தங்கள் தேசியக் கடமையை ஆற்றியுகொண்டிருந்த 2 ஆயுதப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட ஆறு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இந்தியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் மொத்தம் 160 பேர் காயமடைந்துள்ளனர். இக்கட்டான சூழலுக்கு மத்தியில், எத்தகைய அச்சுறுத்தல்களையும் முறியடிக்க, நாடு முழுமையாகத் தயாராகவும், உச்சக்கட்ட எச்சரிக்கை நிலையிலும் இருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதிலும், நாட்டைச் சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் எத்தகைய முயற்சிகளையும் உறுதியுடன் எதிர்கொள்வதிலும் தங்களுக்குள்ள அர்ப்பணிப்பை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel