ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் பல முக்கிய அறிவிப்புகளும், மாற்றங்களும் அமலுக்கு வரவிருக்கிறது. பள்ளிகள், வங்கிச் சேவைகள், பயண விதிகள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான சலுகைகள் என மாணவர்கள் முதல் அமீரகவாழ் இந்தியர்கள் வரை அனைவரின் அன்றாட வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் இதில் அடங்கும். அவற்றைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்:
1. பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நீட்டிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள மழலையர் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்வி நிறுவனங்களும் இணையவழி வகுப்புகளை ஏப்ரல் 17, 2026 வரை நீட்டித்துள்ளது.
அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகாரிகள் வாரந்தோறும் நிலைமையை மதிப்பாய்வு செய்வார்கள் எனவும், நிலவரங்களைப் பொறுத்து ஏப்ரல் 17 ஆம் தேதி திருத்தப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
2. வங்கிகள் SMS OTP-களை நிறுத்துகின்றன
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள வங்கிகள் இப்போது SMS மற்றும் மின்னஞ்சல் OTP-களிலிருந்து முழுமையாக விலகி வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் இனி கைரேகை அல்லது முகத்தை அடையாளம் காணுதல் போன்ற செயலி அடிப்படையிலான சரிபார்ப்பு தேவைப்படும்.
இந்த மாற்றம் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், சிம் கார்டு மாற்றுதல் மற்றும் ஃபிஷிங் போன்ற மோசடிகளைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
3. முடிவடையும் விசா சலுகைக் காலம்
காலாவதியான விசாக்களைக் கொண்ட குடியிருப்பாளர்கள் புதிய விசா இல்லாமல் திரும்புவதற்கான சிறப்பு சலுகைக் காலம் மார்ச் 31 தேதியுடன் முடிவடைந்தது.
அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பயண இடையூறுகள் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த குடியிருப்பாளர்களுக்கு உதவியது. இனிமேல், சாதாரண விசா விதிகள் மீண்டும் பொருந்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4. துபாய் மிராக்கிள் கார்டனில் தள்ளுபடி டிக்கெட்டுகள்
துபாய் மிராக்கிள் கார்டன், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு 30 திர்ஹம்ஸ் என்ற தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளை வழங்குகிறது.
மேலும், 12 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகள் இலவசமாக நுழையலாம். தள்ளுபடியைப் பெற, பார்வையாளர்கள் செல்லுபடியாகும் எமிரேட்ஸ் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
5. இந்தியர்களுக்கான பான் கார்ட் விதிகள் மாற்றம்
இந்தியக் குடிமக்கள் பான் அட்டைக்கு விண்ணப்பிக்க இனி கூடுதல் ஆவணங்கள் தேவைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, ஏப்ரல் 1 முதல், ஆதார் மட்டும் போதாது. விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது பிறப்புச் சான்றிதழ் போன்ற கூடுதல் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரிபார்ப்பை மேம்படுத்துவதற்காக இந்திய வருமான வரித் துறை கொண்டு வந்துள்ள புதிய விதிகளின் கீழ் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்த அறிவிப்புகள் அமீரகக் குடியிருப்பாளர்களின் அன்றாட வழக்கத்தைப் பாதிக்கக்கூடும். எனவே, ஏப்ரல் மாதம் தொடங்கும் வேளையில் இந்த தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel