துபாயில் நிதி நெருக்கடிகளைத் தணிப்பதையும், வணிகச் சூழலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட 1 பில்லியன் திர்ஹம் ஊக்கத் திட்டத்தை (Dh1-billion incentive package) துபாய் எமிரேட் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் ஏப்ரல் 1 முதல் அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குச் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
துபாயில் நடைபெற்ற நிர்வாகக் குழுவின் கூட்டத்தைத் தொடர்ந்து, பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் இந்தத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பொருளாதார மீள்திறனை வலுப்படுத்தவும், நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கு ஆதரவளிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
இத்திட்டத்தின் மூலம் பயனடைபவர்கள் யார் மற்றும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் உள்ளிட்ட விபரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
பணியாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கான நடவடிக்கைகள்
ரெசிடென்சி பெர்மிட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தத் திட்டம் உள்ளடக்கியுள்ளது. இது நிறுவனங்கள் திறமையானவர்களைப் பணியமர்த்துவதையும், குடியிருப்பாளர்கள் துபாயில் வசித்துக் கொண்டே பணியாற்றுவதையும் எளிதாக்குகிறது. இது ஆட்சேர்ப்பு செயல்முறைகளை எளிதாக்கி, பணியாளர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுற்றுலா மற்றும் விருந்தோம்பலுக்கான ஆதரவு
சுற்றுலாத் துறைக்கு உதவுவதற்காக, சுற்றுலா திர்ஹம் (Tourism Dirham) மற்றும் ஹோட்டல் விற்பனைக் கட்டணங்களை அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கும். இந்த நடவடிக்கை பணப்புழக்கத்தை மேம்படுத்தி, ஹோட்டல்கள் மற்றும் அது தொடர்பான வணிகங்கள் மீதான குறுகிய கால நிதி அழுத்தங்களைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளுக்கு நிவாரணம்
வர்த்தகம், இறக்குமதி-ஏற்றுமதி மற்றும் லாஜிட்டிக்ஸில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், வரி விதிமுறைகளுக்கு இணங்குவதைத் தக்கவைத்துக் கொள்ளும் அதே வேளையில், சுங்கத் தரவுகளுக்கான சலுகைக் காலம் 30 நாட்களில் இருந்து 90 நாட்களாக நீட்டிக்கப்படுவதால் பயனடையும். இது வணிகங்களுக்கு செயல்பாடுகளை நிர்வகிப்பதிலும் பணப்புழக்கத்திலும் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகங்களுக்கான கட்டண ஒத்திவைப்பு
வணிகங்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்காக, பல்வேறு அரசாங்கக் கட்டணங்களும் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் அடங்கும் குறிப்பிட்ட கட்டணங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துபாயின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவான வளர்ச்சியைக் காட்டி வரும் நிலையில், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டான 2025-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5.4 சதவீதம் உயர்ந்து, 937 பில்லியன் திர்ஹம்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த வணிகச் சூழலைப் பேணுவதில் துபாயின் அர்ப்பணிப்பை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பது, முதலீட்டாளர் நம்பிக்கையை மேம்படுத்துவது, மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வது ஆகியவற்றில் அமீரகம் தொடர்ந்து கவனம் செலுத்துவதோடு, சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவதையும் தொடர்வதாக ஷேக் ஹம்தான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel