அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, புதன்கிழமையன்று (ஏப்ரல் 8) ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் 17 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் 35 ட்ரோன்களையும் இடைமறித்ததாக நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தையும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தையும் சீர்குலைத்துள்ள ஆறு வார கால மோதலை நிறுத்தும் நோக்கில், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் இரண்டு வார கால போர்நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
இந்த தற்காலிக போர் ஒப்பந்தம் இருந்தபோதிலும், குவைத், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஏவப்படும் ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் இடைமறித்து வருவதால் இப்பகுதியில் பதற்றம் அதிகமாகவே உள்ளது.
இதனை தொடர்ந்து ஈரானின் ஏவுகணை தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் 537 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், 26 குரூஸ் ஏவுகணைகளையும், 2,256 ட்ரோன்களையும் இடைமறித்துள்ளன. இந்தச் சம்பவங்களால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 224 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று நடந்த சமீபத்திய சம்பவங்களில், ஹப்ஷானில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்தில் சிதறல்கள் மோதியதில், இரண்டு அமீரக நாட்டினரும் ஒரு இந்தியரும் காயமடைந்தனர்.
மேலும், கடந்த சில மணிநேரங்களில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்புகளில், இரண்டு ஆயுதப் படை வீரர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 பொதுமக்கள் அடங்குவர்.
இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், நாட்டின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்க, பாதுகாப்பு அமைச்சகம் தொடர்ந்து உயர் எச்சரிக்கை நிலையில் இருப்பதாகவும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel