ADVERTISEMENT

வரலாற்றில் இடம்பிடித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் ‘எதிஹாட் ரயில்’ பயணம்: அனுபவத்தைப் பகிர்ந்த பயணிகள்!!

Published: 30 Jun 2026, 9:06 PM |
Updated: 30 Jun 2026, 9:06 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் தேசிய பயணிகள் ரயில் சேவையை எதிஹாட் ரயில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிய நிலையில், மக்கள் மத்தியில் புதிய ரயில் சேவைக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் பயணிகள் ரயில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5:34 மணிக்கு ஃபுஜைராவிலிருந்து புறப்பட்டு, காலை 7:19 மணிக்கு அபுதாபியின் முகமது பின் சையத் சிட்டி நிலையத்தை அடைந்தது.

ADVERTISEMENT

அமீரகத்தின் முதல் பயணிகள் ரயிலில் உற்சாகத்துடன் பயணித்தவர்கள் பலரும் பயணத்திற்கு முன்பு இருந்த ஆவலையும், பயணத்தின் போது அனுபவித்த வசதிகளையும் குறித்து ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டனர். சில பயணிகள் இரவு முழுவதும் தூங்கவே இல்லை என்றும், வேறு சிலர் இதற்காகவே ஒரு நாள் விடுப்பு எடுத்திருந்ததாகவும் கூறியுள்ளனர். ஆறு வயது சிறுவன் ஒருவன், தனக்கென பிரத்யேகமாகத் தைக்கப்பட்ட ரயில் நடத்துனரின் (conductor) சீருடையை பெருமையுடன் அணிந்து ரயில் பயணத்தை அனுபவித்த நிகழ்வானது சகபயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஃபுஜைராவிலிருந்து முதல் ‘எதிஹாட் ரயில்’ சேவை புறப்பட்டபோது, ​​அது வெறும் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் மற்றொரு ரயிலாக மட்டும் இல்லாமல், ஆயிரக்கணக்கான மக்கள் காணக் காத்திருந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமைந்தது.

ஃபுஜைரா மற்றும் அபுதாபிக்கு இடையிலான இந்தப் பயணமானது வெறும் போக்குவரத்தாக மட்டும் அமையாமல், ஒரு கொண்டாட்டமாக மாறியது.

ADVERTISEMENT

முதல் பெட்டி, முதல் இருக்கை: பயணத்தைத் தொடங்கிவைத்த பயணி

இத்தகைய ஒவ்வொரு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திற்கும் ஒரு முதல் பயணி இருப்பது வழக்கம். அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் தேசிய பயணிகள் ரயில் சேவைக்கான அந்தப் பெருமை, ஃபுஜைராவைச் சேர்ந்த எமிராட்டி சுகாதார நிபுணரும், தன்னார்வலரும், மாற்றுத்திறனாளியும் (person of determination) ஆன ஹமத் மன்சூர் அல்புலோஷி (Hamad Mansour Albloushi) அவர்களுக்குக் கிடைத்தது.

“நம்மனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பயணி” (The Passenger Who Represents Us All) என்ற தலைப்பில் எதிஹாட் ரயில் நிறுவனம் நடத்திய நாடு தழுவிய பிரச்சாரத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமத், முதல் பெட்டியின் முதல் இருக்கையில் அமர்ந்து, நாட்டின் தேசிய ரயில் சேவையின் கட்டணம் செலுத்திப் பயணிக்கும் முதல் பயணி என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

எமிரேட்ஸ் ரெட் கிரசண்ட் (Emirates Red Crescent) மற்றும் ஜூசூர் அல்-கைர் (Jusoor Al-Khair) போன்ற அமைப்புகள் மூலம் அவர் ஆற்றிய பல ஆண்டுகால சமூக சேவையை அங்கீகரிக்கும் விதமாக அவரைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஹமத் பேசுகையில், “முதல் பெட்டியின் முதல் இருக்கையில் அமர்ந்தபோது, ​​இது என்னுடைய பயணம் மட்டுமல்ல, இனி வரவிருக்கும் லட்சக்கணக்கான பயணங்களின் தொடக்கம் இது என்பதை நான் உணர்ந்தேன், முதல் பயணியாக இருப்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு பெருமை.” என்று தெரிவித்துள்ளார்.

இவரைப்போலவே, முதல்நாள் ரயில் சேவையை முன்பதிவு செய்த பல பயணிகளுக்கு, முந்தைய நாள் இரவே உற்சாகம் தொற்றிக்கொண்டது.

துபாயைச் சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் ரயில் பயணத்தை எண்ணி இரவு முழுவதும் தூங்கவே இல்லை என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, “இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தின் ஒரு பகுதியாக இருக்கவே நான் இன்று விடுப்பு எடுத்தேன்” என்று அவர் கூறியதும் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ரயில் மேற்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ​​ஹஜார் மலைகளுக்குப் பின்னாலிருந்து சூரியன் உதிக்கும் காட்சியைப் பயணிகள் பலரும் பார்த்து ரசித்தனர். பயணத்தின் மிகச் சிறந்த அனுபவமாக அது இருந்தது என்று துபாய்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், குடும்பத்துடன் ரயிலில் பயணம் செய்தவர்கள், இந்தப் பயணம் ஒரு குடும்ப நிகழ்வாக அமைந்ததாகக் கூறியுள்ளனர்.

குறிப்பாக, ரயிலுக்குள் அகலமான இருக்கைகள், பெரிய ஜன்னல்கள் மற்றும் வசதியான பெட்டிகள் ஆகியவை பயணத்தின்போது குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருந்ததாகவும், இதனால் பயணம் எதிர்பார்த்ததை விட மிகவும் எளிதாக இருந்ததாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

மேலும், மொபைல், பைகள் மற்றும் உடைமைகளை வைப்பதற்கான பிரத்யேக இடங்களுடன் இருக்கைகள் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டிருந்ததாகப் பலர் கூறினர். அதேவேளையில், ரயிலில் உள்ள வைஃபை (Wi-Fi) மற்றும் மின்சார இணைப்புகள் பயணத்தின்போது வேலை செய்யவோ அல்லது ஓய்வெடுக்கவோ பயணிகளுக்கு உதவியதாகத் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ரயில் சேவை சகாப்தத்திற்கு ஒரு சிறப்பான தொடக்கம்

இவ்வாறு தொடக்க நாளன்று பயணிகளிடையே நிலவிய உற்சாகம், ரயில் பயணத்தின் மீதான பொதுமக்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தியது. ‘எதிஹாட் ரயில் மொபிலிட்டி’யின் வணிக மற்றும் ஆதரவுப் பிரிவு நிர்வாக இயக்குனர் அத்ரா அல்மன்சூரி, ரயில் நிலையங்களில் நிலவிய உற்சாகம், இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை தங்கள் குழுவினருக்கு மீண்டும் உணர்த்தியதாகக் கூறியுள்ளார்.

முன்பதிவு தொடங்கிய பிறகு 10,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக எதிஹாட் நிறுவனம் அறிவித்தது. குறிப்பாக, தொடக்கப் பயணங்களுக்கான டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்றுத் தீர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, முதல் நாளில் ஃபுஜைரா மற்றும் அபுதாபி இடையே ஆறு பயணிகள் ரயில் சேவைகளை ‘எதிஹாட் ரயில்’ (Etihad Rail) நிறுவனம் வெற்றிகரமாக இயக்கியுள்ளது.

அபுதாபியில் பயணிகள் இறங்கியபோது, ​​இரு நகரங்களுக்கு இடையிலான பயணத்தை விடவும் மேலான ஒரு அனுபவத்தைப் பெற்றதாகப் பலரும் ஒப்புக்கொண்டனர்.

மேலும், முதல் நாளிலேயே ரயிலில் ஏறிய ஆயிரக்கணக்கானோருக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய ரயில் சேவையின் முதல் பயணிகளில் ஒருவராக இருந்த அந்த நினைவானது நீண்ட காலத்திற்கு அவர்களுடன் நிலைத்திருக்கும் என்பது சிறப்பிற்குரியது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel