ADVERTISEMENT

மிக வெப்பமான கோடைக்காலத்தை எதிர்கொள்ளத் தயாராகும் அமீரகம்: ஜூலை 3 முதல் வெப்பநிலை 50°C-க்கு மேல் உயரக்கூடும் என எச்சரிக்கை!!

Published: 2 Jul 2026, 11:49 AM |
Updated: 2 Jul 2026, 11:49 AM |
Posted By: Menaka

உலகின் வெப்பமான பாலைவன நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம், சுட்டெரிக்கும் கோடைக்காலத்தை அனுபவித்து வரும் நிலையில், அந்நாடு ஆண்டின் மிக வெப்பமானதாகக் கருதப்படும் காலகட்டத்திற்குள் நுழையவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ஜூலை 3 முதல், அமீரகமும் பரந்த அரேபிய தீபகற்பமும் ‘ஜம்ரத் அல்-கைத்’ (Jamrat Al Qayth) எனப்படும் காலகட்டத்திற்குள் நுழையாவுள்ளதாகக் கூறப்படுகிறது. “கோடைக்காலத் தணல்” எனப்படும் இந்த பருவம் சுட்டெரிக்கும் வெப்பநிலை, வறண்ட பாலைவனக் காற்று மற்றும் தணியாத வெப்பம் ஆகியவற்றிற்குப் பெயர் பெற்ற 40 நாள் காலமாகும்.

எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் (Emirates Astronomy Society) கூற்றுப்படி, இது வளைகுடாப் பகுதியின் கோடைக்கால உச்சத்தைக் குறிக்கிறது. இக்காலத்தில் சில உள்நாட்டு மற்றும் பாலைவனப் பகுதிகளில் வெப்பநிலை 50°C-க்கு மேல் உயரக்கூடும் என்று எமிரேட்ஸ் வானியல் சங்கம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

கிழக்கு அடிவானத்திற்கு மேலே மிதுன ராசியின் (Gemini constellation) முதல் நட்சத்திரம் விடியற்காலைக்கு முன் தோன்றுவதன் மூலம் இக்காலம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி, ஆகஸ்ட் 10 வரை நீடிக்கிறது. இந்த வானியல் நிகழ்வு பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்க்காமல் போகலாம் என்றாலும், இப்பகுதியின் மிகத் தீவிரமான கோடைக்கால நிலையை உணர்த்தும் ஒரு பாரம்பரிய அடையாளமாக இது நீண்ட காலமாகத் திகழ்வதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பல தலைமுறைகளாக, அரேபிய தீபகற்பம் முழுவதும் உள்ள மக்கள் கோடைக்கால வெப்பம் அதன் உச்சத்தை அடையும் காலத்தை விவரிக்க ‘ஜம்ரத் அல்-கைத்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். தணியாத தணல்களைப் (எரியும் கங்குகளைப்) போலவே, இக்காலகட்டமும் இடைவிடாத பகல்நேர வெப்பம், மிகக் குறைந்த மழைப்பொழிவு மற்றும் வாரக்கணக்கில் நீடிக்கும் வெப்பமான, வறண்ட வானிலை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் தலைவரும், அரபு வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் சங்கத்தின் உறுப்பினருமான இப்ராஹிம் அல்-ஜர்வான் (Ibrahim Al Jarwan) அவர்களின் கூற்றுப்படி, இப்பகுதி முழுவதும் ஆண்டின் மிக வெப்பமான மற்றும் வறண்ட கட்டமாக இது பாரம்பரியமாக கருதப்படுகிறது.

குடியிருப்பாளர்களின் கவனத்திற்கு

‘ஜம்ரத் அல்-கைத்’ காலத்தில், ஐக்கிய அரபு அமீரகம் அடிக்கடி ‘சமூம்’ (Samoom) காற்றை, அதாவது வெளிப்புறச் சூழலை இன்னும் கடுமையாக்கக்கூடிய மிக வெப்பமான, வறண்ட பாலைவனக் காற்றை எதிர்கொள்ளும் என்பதால், சில பாலைவனப் பகுதிகளில் வெப்பநிலை 50°C-க்கு மேல் உயரக்கூடும் என்றும், அதே வேளையில் நாட்டின் பெரும்பகுதி மீண்டும் மீண்டும் நிகழும் வெப்ப அலைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அல் ஜார்வான் கூறியுள்ளார்.

உள்ளூரில் ‘வக்ரத் அல்-கைத்’ (Waghrat Al Qayth) என்று அழைக்கப்படும் இந்த வெப்ப அலைகள் குறித்து அல்-ஜர்வான் கூறுகையில், வெப்பநிலை தொடர்ந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்குப் பருவக்கால சராசரியை விட குறைந்தது 4°C அதிகமாக இருக்கும்போது இவை ஏற்படுகின்றன என்றும், இது நீண்ட காலத்திற்குத் தீவிர வெப்பத்தை உருவாக்குகிறது என்றும் விளக்கமளித்துள்ளார்..

அவரது கூற்றுப்படி, ஆகஸ்ட் 10 அன்று, அல் நத்ரா (கடக ராசியில் தேன்கூட்டுக் கொத்து அல்லது பிரேசெப் என்றும் அழைக்கப்படுகிறது) தோன்றுவதோடு இந்தப் பருவம் முடிவடைகிறது.

ஆனால், கடுமையான வறண்ட வெப்பம் தணியத் தொடங்கினாலும், குடியிருப்பாளர்கள் உடனடியாகக் குளிர்ச்சியான வானிலையை எதிர்பார்க்கக் கூடாது என்பதையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

மாறாக, ஆகஸ்ட் 11 அன்று ஐக்கிய அரபு அமீரக கோடையின் மற்றொரு சவாலான கட்டம் தொடங்குவதாக அல் ஜார்வான் குறிப்பிட்டுள்ளார். அன்று, குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில், ஈரப்பதம் கடுமையாக உயரத் தொடங்குவதால், ஜூலை மாதத்தின் வறண்ட வெப்பத்தை விடவும் நிலைமைகளை மிகவும் அசௌகரியமாக உணரச் செய்யும் என்று குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளார்.

இவ்வாறு ஐக்கிய அரபு அமீரகம் அதன் வெப்பமான வாரங்களுக்குள் நுழையும் நிலையில், பிற்பகல் உச்ச நேரங்களில் வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும், போதுமான அளவு நீர் அருந்தவும், வெப்பம் தொடர்பான நோய்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகள் குடியிருப்பாளர்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்துகின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel