ADVERTISEMENT

சவுதி அரேபியாவில் கொரோனாவிற்கு இன்று மட்டும் 4 பேர் உயிரிழப்பு.. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1299 ஆக உயர்வு…!!!

Published: 29 Mar 2020, 3:59 PM |
Updated: 29 Mar 2020, 4:04 PM |
Posted By: jesmi

வளைகுடா நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியா தற்பொழுது மற்ற வளைகுடா நாடுகளைக் காட்டிலும் கொரோனா வைரஸால் அதிகம் பாதிப்படைந்து கொண்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சவூதி அரேபியாவில் இன்று மட்டும் 4 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால், அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் 96 பேர் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1299 ஆக அதிகரித்துள்ளது. கூடுதலாக, ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 28 பேர் தற்பொழுது குணமடைந்துள்ளதையொட்டி, அங்கு இதுவரை 66 பேர் கொரோனா பாதித்து குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

மக்களை வீட்டில் தங்குமாறு கேட்டுக்கொண்ட அமைச்சகம், வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்கவும், அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து மட்டுமே தகவல்களை எடுக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது. மேலும், ஊரடங்கு உத்தரவு மீதான மக்கள் உறுதிப்பாட்டை உள்துறை அமைச்சகம் பாராட்டியது.

ADVERTISEMENT

இன்று முன்னதாக, சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் ஒப்புதல் அளித்த புதிய கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின்படி, சவூதி அரேபியாவில் வசிப்பவர்கள் ஜித்தா, ரியாத், மக்கா மற்றும் மதீனா ஆகிய நகரங்களுக்கு உள்நுழையவோ அல்லது வெளியேறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டின் 13 மாகாணங்களில் வசிப்பவர்கள் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையில் பயணம் செய்வதைத் தடைசெய்யும் நடவடிக்கைக்கும் மன்னர் சல்மான் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.

கொடிய வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு பெரிய முயற்சியில், சமீபத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், தற்சமயம் அந்நாட்டிலுள்ள ஜித்தா, ரியாத், மக்கா மற்றும் மதீனா ஆகிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவானது இரவு 7 மணிக்கு பதிலாக மாலை 3 மணியில் இருந்தே தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு, இராணுவம் மற்றும் ஊடகங்கள் போன்ற முக்கிய பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ளவர்களுக்கு ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், சுகாதார சேவைகளில் பணிபுரிபவர்களுக்கும் ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.