ADVERTISEMENT

சவூதி அரேபியாவில் ரியாத், ஜித்தா உட்பட பல இடங்களில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு..!!! பின்பற்ற தவறினால் 2,00,000 பேருக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்பு..!!

Published: 7 Apr 2020, 4:33 PM |
Updated: 7 Apr 2020, 4:36 PM |
Posted By: jesmi

சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்பொழுது சவூதி அரேபியாவில் இன்று மட்டும் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2795 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக ஏற்கெனவே சவூதி மன்னரால் 21 நாட்களுக்கு இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே. அதன் பின், சில நகரங்களில் ஊரடங்கு உத்தரவானது மதியம் 3 மணி முதல் காலை 6 மணி வரை என மாற்றி அமைக்கப்பட்டது. மேலும், சவூதி அரேபியாவில் உள்ள இரு புனித நகரங்களான மக்கா மற்றும் மதினாவில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் தற்பொழுது சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் உட்பட அங்குள்ள பல நகரங்களுக்கு 24 மணி நேர ஊரடங்கு உத்தரவை சவூதி அரசு பிறப்பித்துள்ளது. தபுக் (Tabuk), தமாம் (Dammam), தஹ்ரான் (Dhahran), அல்-ஹோஃபுஃப் (Al-Hofuf), ஜித்தா (Jeddah), தைஃப் (Taif), அல்-கதிஃப் (Al-Qatif) மற்றும் அல்-கோபர் (Al-Khobar) ஆகிய நகரங்களிலும் இந்த நாள் முழுவதுமான ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசாங்கம் கொரோனா வைரஸிற்கு எதிராக அறிவித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் தீவிரத்தை உணராத பல பேர் வெளியே நடமாடிக் கொண்டும், பல பேருடன் ஒன்றிணைந்து கூட்டமாக செயல்படுவதுமே இந்த முடிவு எடுக்கக் காரணாமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேற்குறிப்பிட்ட நகரங்களில் இருந்து பொதுமக்கள் எவரும் வெளியில் செல்வதற்கும் மற்றும் வெளியிடங்களில் இருந்து உள்ளே வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முழுநேர ஊரடங்கு உத்தரவானது அடுத்த அறிவிப்பு வரும் வரை செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நகரங்களில் உள்ள குடியிருப்பாளர்கள்,அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே காலை 6 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை இடையேயான நேரங்களில் வெளியே வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பொதுமக்கள் அரசின் கட்டளைகளை பின்பற்றாமலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காமலும் தற்போதைய சூழல் தொடர்ந்து நீடிக்குமாயின் கொரோனா வைரஸ் தொற்றால் 2,00,000 பேர் பாதிப்படைய வாய்ப்புகள் இருப்பதாக சவூதி அரேபியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் தௌபிக் அல் ரபியா (Dr. Tawfiq Al Rabiah) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.