ADVERTISEMENT

தனியார் துறையில் பணிபுரியும் பஹ்ரைன் நாட்டவர்களின் மூன்று மாத சம்பளத்தை அரசே வழங்கும்..!!! தொழிலாளர் அமைச்சகம் தகவல்..!!!

Published: 9 Apr 2020, 6:33 PM |
Updated: 9 Apr 2020, 6:40 PM |
Posted By: jesmi

வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைன், தனியார் துறையில் பணிபுரியும் தன் நாட்டின் 1,00,000 குடிமக்களுக்கு (citizens) ஏப்ரல் முதல் ஜூன் வரையிலுமான மூன்று மாத காலத்திற்குண்டான சம்பளத்தை அரசே வழங்கும் என்று அறிவித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள மந்தநிலையின் காரணமாக பாதிப்புள்ளாகி இருக்கும் அந்நாட்டு குடிமக்களுக்கு சம்பளம் வழங்குவதற்காகவே 570 மில்லியன் அமெரிக்க டாலர்ஸ் ஒதுக்கியுள்ளதாகவும் அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கொரோனா பாதிப்பையொட்டி உலகளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை போலவே பஹ்ரைன் நாட்டிலும் பல்வேறு நடவடிக்கைகள் செய்லபடுத்தப்பட்டன. அதில் பயணிகள் விமான போக்குவரத்து தடை, ஊரடங்கு உத்தரவு, பொது நிகழ்ச்சிகள் ரத்து போன்றவை அடங்கும். இதனால் ஏற்பட்ட பொருளாதார சரிவை சரிசெய்யும் விதமாக மற்ற நாடுகளான அமீரகம், சவூதி அரேபியா போன்ற நாடுகளை போலவே பஹ்ரைன் நாடும் தனது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல திட்டங்களை கொண்ட தொகுப்பை (Stimulus Package) அறிவித்துள்ளது.

இதேபோன்று பஹ்ரைன் நாட்டவருக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் சுமையை குறைக்கும் வண்ணம் அவர்களின் தண்ணீர் மற்றும் மின்சாரம் கட்டணத்தை அரசே செலுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட சுற்றுலா தொழில் சார்ந்தவர்களுக்கு வரி சுமையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்காகவே பிரத்யேகமாக ஒரு மின்னணு தளம் (electronic platform) உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அதில் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் தனியார் துறையில் பணிபுரியும் பஹ்ரைன் நாட்டு குடிமக்களுக்கு சம்பளம் வழங்க தொழில் நிறுவனங்கள் தங்களை இணைத்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டமானது, கடந்த மார்ச் மாதம் பஹ்ரைன் அரசால் அறிவிக்கப்பட்ட 11 பில்லியன் அமெரிக்க டாலர்ஸ் கொண்ட மெகா திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.