ADVERTISEMENT

துபாயில் நடைபெறும் 24 மணி நேர சுத்திகரிப்பு திட்டம் மேலும் ஒரு வார காலம் நீட்டிப்பு..!! துபாய் பேரிடர் குழு அறிவிப்பு..!!

Published: 17 Apr 2020, 4:49 PM |
Updated: 17 Apr 2020, 4:51 PM |
Posted By: jesmi

துபாயில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 24 மணி நேர சுத்திகரிப்பு திட்டமானது , மேலும் ஒரு வாரம் நீட்டிக்கபடுவதாக மாண்புமிகு ஷேக் மன்சூர் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையிலான துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான உச்சக் குழு (Dubai’s Supreme Committee of Crisis and Disaster Management) இன்று (ஏப்ரல் 17,2020) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த இரு வாரங்களாக நடைபெற்ற சுத்திகரிப்பு திட்டம் மற்றும் பொதுமக்களின் இயக்க கட்டுப்பாட்டு விதிகள் போன்றவற்றின் மூலம் ஏற்பட்ட நேர்மறையான விளைவுகளின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஏப்ரல் 4, 2020 முதல் நடைமுறைக்கு வந்த 24 மணி நேர சுத்திகரிப்பு திட்டத்தை தற்பொழுது மேலும் நீட்டிப்பதற்கான இந்த குழுவின் முடிவானது, கொரோனாவிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் உயர்த்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைந்து, கடந்த இரண்டு வாரங்களில் நடைபெற்ற சுத்திகரிப்பு திட்டத்தின் தாக்கத்தினை கவனமாக மதிப்பீடு செய்ததன் அடிப்படையில், அதனை மேலும் ஒருவார காலம் நீடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் கூறுகையில், “பொதுமக்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டம் மீதான தீவிரமான கட்டுப்பாடுகளின் முடிவுகளை இந்த குழு உன்னிப்பாகக் கண்காணித்தது. இந்த நடவடிக்கைகள் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான முயற்சிகளை துரிதப்படுத்தியது. துபாய் நகரம் முழுவதிலும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை பெரிய அளவில் மேற்கொள்ள பெரிதும் உதவியது. மேலும் மருத்துவ குழுக்கள் அதிக எண்ணிக்கையிலான விரிவான பரிசோதனைகளை மேற்கொள்ள சுலபமாக இருந்தது” என்றும் தெரிவித்துள்ளனர்.

எனினும் முன்னர் கூறப்பட்டதை போன்றே, பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே செல்லக் கூடாது என்றும் அவ்வாறு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு செல்பவர்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இயக்க அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நேற்று துபாய் காவல்துறையின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையின் படி அத்தியாவசிய தேவையான மருந்துகள் மற்றும் உணவு உள்ளிட்டவற்றை வாங்குவதற்கான அனுமதி ஒரு நபருக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்றும், ATM-ல் பணம் எடுக்க கூடிய தேவைகளுக்கான அனுமதி ஒரு நபருக்கு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.