சவூதி அரேபியாவில் கொரோனாவின் பரவலையொட்டி கடந்த சில வாரங்களாக சவூதி அரேபியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. சில முக்கிய நகரங்களில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவும் சில நகரங்களில் மாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை என ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ரமலான் மாதத்தையொட்டி குடியிருப்பாளர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் சில இடங்களில் மாலை 3 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த நகரங்களில் உள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வெளியே செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ரியாத், தபுக், தமாம், தஹ்ரான் மற்றும் ஹோஃபுஃப் நகரங்கள் மற்றும் ஜித்தா, தைஃப் போன்ற 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட இடங்களில் இருக்கும் குடியிருப்பாளர்கள் ரமலான் மாதத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான நேரம் கொடுக்கப்படுகிறது. இந்த நேரங்களில் அத்தியாவசியத் தேவையின்றி பொதுவெளியில் மக்கள் நடமாடக்கூடாது என அறிவித்திருக்கும் அரசு, வெளியே செல்லும் நபர்களின் வாகனங்களில் இரண்டு நபர்களுக்கு (ஓட்டுநர் உட்பட) மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் மக்கா மற்றும் மதீனாவைப் போலவே, முற்றிலுமாக லாக்டவுன் செய்யப்பட்டு இருக்கும் சுற்றுப்புற இடங்களில் வசிக்கும் மக்களுக்கு இது பொருந்தாது என்றும் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. அவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படும் என்றும் சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.