ADVERTISEMENT

வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்து வர நாங்கள் தயார்..!! இந்திய கடற்படை தலைவர் தகவல்..!!

Published: 2 May 2020, 6:47 AM |
Updated: 2 May 2020, 7:02 AM |
Posted By: jesmi

கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்ட விமான போக்குவரத்து தடையால் வளைகுடா நாடுகளில் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான மாபெரும் முயற்சி திட்டமிடப்பட்டு வருவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்திய அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனங்களின் விமானங்களும் இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல்களும் பயன்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

மேலும் இந்த நடவடிக்கைக்கு இந்திய ஆயுதப்படைகள் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்திய கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்த செய்தியில், வளைகுடா நாடுகளில் இருந்து இந்திய குடிமக்களை தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இந்திய கடற்படை தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

“வளைகுடாவில் எங்களுக்கு பெரியளவிலான எண்ணிக்கையில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உள்ளனர். நாங்கள் அவர்களை அழைத்து வருவதற்காக தயாராக இருக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் அனைவரும் சேர்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நாங்கள் எங்கள் கப்பல்களைத் தயார் நிலையில் வைத்துள்ளோம். அரசிடமிருந்து ”செல்லுங்கள்” (Go Ahead) என்ற உத்தரவிற்காக காத்திருக்கிறோம். உத்தரவு வந்தவுடன் நாங்கள் தயாராக வைத்திருக்கும் கப்பல்களின் மூலம் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை விரைவில் அழைத்து வருவோம்” என்று அட்மிரல் கரம்பீர் சிங், பிபின் ராவத் (பாதுகாப்புத் தளபதி, CDS) மற்றும் இரண்டு சேவைத் தலைவர்கள் உள்ளிட்டோருடன் கூட்டாக நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

“போர்க்கப்பல் மூலம் அழைத்து வரும் இந்த நடவடிக்கை இது ஒரு முறை பயணமாக இல்லாமல், அதிக பயணங்களை மேற்கொண்டு வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவோம். இது அங்குள்ள இந்தியர்களின் எண்ணிக்கையை பொறுத்து தொடர்ச்சியான செயல்முறையாக இருக்கலாம்” என்றும் அவர் மேலும் கூறினார்

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பினால் விதிக்கப்பட்டுள்ள விமான கட்டுப்பாடுகள் கொரோனா தொற்று பரவலானது கட்டுக்குள் வந்தவுடன் நீக்கப்படும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

 

source : ANI News