ADVERTISEMENT

இறந்த கணவரின் உடலுடன் சென்ற மனைவி உள்ளிட்ட 360 பயணிகளுடன் அமீரகத்திலிருந்து சென்னை சென்றடைந்த விமானங்கள்..

Published: 9 May 2020, 6:58 AM |
Updated: 9 May 2020, 10:08 AM |
Posted By: jesmi

கொரோனாவின் பாதிப்பையொட்டி வெளிநாடுகளில் சிக்கியுள்ள பெருமளவிலான இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான “வந்தே பாரத்” எனும் மெகா திட்டத்தை இந்திய அரசாங்கம் செயல்படுத்திக் கொண்டு வருகின்றது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, மே மாதம் 7 முதல் 13 ம் தேதி வரையிலான முதல் வாரத்திற்கான பயண அட்டவணை தயாரிக்கப்பட்டு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் படி, முதல் நாளில் இரண்டு விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து இரண்டாம் நாளில் தமிழகத்திற்காக அறிவிக்கப்பட்ட இரண்டு விமானங்கள் 360க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மே 8 ம் தேதி அமீரகத்தில் உள்ள துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தை வெள்ளிக்கிழமை (நேற்று) இரவு சென்றடைந்தது. இந்த விமானங்களில் ஒன்று 8 ம் தேதி மதியம் 2.15 மணிக்கு புறப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், திடீரென புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு முதல் விமானம் இரவு 8 மணிக்கும் இரண்டாவது விமானம் இரவு 9 மணிக்கும் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு கொரோனாவிற்கான IgG/IgM மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்பதால் 5 மணி நேரத்திற்கு முன்பாக செல்ல வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவித்திருந்த நிலையில், விமானத்தின் காலதாமதம் குறித்து அறியாத சிலர் வெள்ளிக்கிழமை காலையிலேயே விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.

ADVERTISEMENT


360க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்னை சென்ற இந்த இரு விமானங்களில் பல தரப்பட்ட காரணங்களால் இந்தியா செல்ல முடியாமல் அமீரகத்தில் சிக்கி தவித்த இந்தியர்கள் தற்பொழுது தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.

இதில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX540 என்ற விமானத்தில் 29 வயதான கோலம்மாள், தனது இறந்த கணவரின் உடலுடன் ஒரே விமானத்தில் பயணித்துள்ள சோகமும் அரங்கேறியுள்ளது. இவரது கணவர் எல்.எம்.குமார் (வயது,35) ராஸ் அல் கைமாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் மூத்த தரக் கட்டுப்பாட்டு அதிகாரியாக (senior quality control officer) பணியாற்றியுள்ளார். இவர் கடந்த மாதம் ஏப்ரல் 13 அன்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை துபாயிலிருந்து சென்னை செல்லும் விமானத்தில் உள்ள சரக்கு பொருட்கள் ஏற்றும் பகுதியில் கணவரின் இறந்த உடல் வைக்கப்பட்டு அதே விமானத்தில் கோலம்மாள் சென்னைக்கு சென்றடைந்த துயர சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், சென்னைக்கு சென்ற விமானங்களில் பயணித்த 360 பயணிகளில் 200  தொழிலாளர்கள், 37 கர்ப்பிணி பெண்கள், மருத்துவ ரீதியிலான பிரச்சனைகள் உடைய 42 பேர் ஆகியோர் இந்த விமானங்களில் பயணித்துள்ளனர்.


இதில் குறிப்பாக, சென்னையிலிருந்து அமீரகத்திற்கு விசிட்டில் வந்த ஜான் பிலிப் என்ற நபர் விமானத்தில் பயணிப்பதற்கு கொரோனாவிற்கான PPE Suit எனப்படும் உடல் முழுவதும் மறைக்கக்கூடிய உடை அணிந்து விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

மேலும், இந்த விமானத்தில் பயணிக்கக்கூடிய அனைவருக்கும் கொரோனாவிற்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் அவர்கள் அனைவரும் கொரோனாவிற்கான அறிகுறிகள் இல்லாதிருப்பதை உறுதி செய்த பின்னரே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். கூடுதலாக விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இந்திய தூதரக அதிகாரி உமா, தமிழ் மொழியில் பயணத்தின் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.


360 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற விமானங்களானது வெள்ளிக்கிழமை இரவு சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தது. பயணிகள் தமிழகத்திற்கு சென்றடைந்ததை அடுத்து, அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாக கொரோனாவிற்கான பரிசோதனை, 14 நாட்கள் தனிமைப்படுத்தல் போன்ற வழிமுறைகள் பின்பற்றப்பட்டு கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என உறுதி செய்த பின்னரே அவரவர் வீடுகளுக்கு பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.