ADVERTISEMENT

துபாயில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பூங்காக்கள் மீண்டும் திறப்பு..!!

Published: 13 May 2020, 6:43 AM |
Updated: 13 May 2020, 6:45 AM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் சமீப காலமாக ஒவ்வொன்றாக தளர்த்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் துபாய் ஃபெர்ரி, வாட்டர் டாக்ஸிகள் போன்ற கடல் போக்குவரத்து சேவைகள் மற்றும் டிராம் சேவைகள் ஆகியவை மீண்டும் இயங்கவுள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்திருந்தது. கூடுதலாக, ஐந்து பேர் வரை திறந்தவெளிகளில் நடைபெறும் சைக்கிள் ஓட்டுதல், நீர் விளையாட்டு மற்றும் ஸ்கை டைவிங் (sky diving) உள்ளிட்ட  விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும் என்றும் இந்த விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது விரிவான தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி தற்காலிகமாக மூடப்பட்டிருந்த துபாயில் இருக்கும் பொது பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படுவதாக செவாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து நபர்கள் அல்லது அதற்கும் குறைவான நபர்கள் ஒன்றிணைந்து பூங்காவிற்கு செல்லலாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மை உச்சக் குழுவின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஷாப்பிங் மால்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு பொருட்களை திருப்பி மாற்றிக்கொள்ளவும் (refund and return of goods), உடை மாற்றும் அறைகள் போன்றவற்றை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வணிக வளாகங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் கொரோனாவிற்கான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தொடர்ந்து, உள்ளூர் மற்றும் கூட்டாட்சி அதிகாரிகள் வகுத்துள்ள அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் பொது இடங்களில் தொடர்ந்து பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். வைரஸின் பரவலைக் குறைப்பதற்கான பாதுகாப்பு மற்றும் ஆதரவு முயற்சிகளை மேம்படுத்துவதற்கு இந்த நடவடிக்கைகளை அனைத்து நேரங்களிலும் கண்டிப்பாக கடைப்பிடிப்பது மிக முக்கியமானது என்றும் கூறப்பட்டுள்ளது.