ADVERTISEMENT

சொந்த கிளினிக் நடத்த நோயாளிகளின் மொபைல் எண், முகவரியை திருடிய மருத்துவர்.. 50,000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்த அமீரக நீதிமன்றம்..!!

Published: 13 Feb 2023, 2:18 PM |
Updated: 13 Feb 2023, 2:18 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி எமிரேட்டில் சட்டவிரோதமாக செயல்பட்ட மருத்துவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, அபுதாபியில், தான் பணியாற்றிய மருத்துவமனையின் நோயாளிகள் குறித்த விவரங்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உட்பட பல்வேறு ரகசிய தகவல்களை சட்டவிரோதமாக எடுத்த மருத்துவருக்கு 50,000 திர்ஹம்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், மருத்துவர் நோயாளிகளின் தகவல்களை எடுப்பதன் மூலம், தற்போது பணிபுரியும் மருத்துவமனையை விட்டு அவர் வெளியேறிய பிறகு, நோயாளிகளைத் தொடர்பு கொண்டு ஒரு தனியார் கிளினிக்கில் அவர்களுக்கு சிகிச்சையை முடித்து மற்ற மருத்துவ சேவைகளை வழங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அபுதாபி முதல்நிலை நீதிமன்றத்தில், தங்கள் மருத்துவமனையில் பணிபுரிந்த முன்னாள் மருத்துவர், நோயாளிகளின் ரகசிய தகவல்களைத் திருடி அவர்களை அந்த மருத்துவரின் சொந்த கிளினிக்கில் மருத்துவம் பார்க்க வரவழைத்ததாக அபுதாபியில் உள்ள ஹெல்த்கேர் சென்டர் குற்றம் சாட்டியுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, குற்றம்சாட்டப்பட்டுள்ள மருத்துவர் முன்பு அந்த மருத்துவமனையில் ஒரு சிறப்பு மருத்துவராக பணிபுரிந்ததாகவும், ஆனால் அவர் தனது பதவியைப் பயன்படுத்தி அந்த மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகளின் தரவு, முகவரிகள் மற்றும் தொலைபேசி தொடர்புகளைத் திருடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அவர் நோயாளிகளுக்குத் தொடர்பு கொண்டு, அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறிய பிறகு தனது தனியார் கிளினிக்கில் தம்மைச் சந்தித்து சிகிச்சையை பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து மேலும் மருத்துவமனை தரப்பு கூறுகையில், மருத்துவரின் சட்டவிரோத செயல்பாட்டினால் பொருளாதார இழப்புகளைச் சந்தித்ததாகவும், நோயாளிகளின் தரவுகள் திருடப்பட்டதால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழந்து பாதிக்கப்பட்டதாகவும் அத்துடன் இது மருத்துவப் பராமரிப்பின் நற்பெயருக்கு கேடு விளைவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, மருத்துவமனை தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மருத்துவர் ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார். நீதிமன்றத்தில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். மேலும், மருத்துவர் தரப்பு வழக்கறிஞர் பேசுகையில், ஒரு மருத்துவர் என்ற முறையில் அவர் தகவல்களைப் பெற்றதால், அந்த தரவுகள் ரகசியமானவை அல்ல என்று வாதிட்டு இத்துடன் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பின்னர், இருதரப்பினரின் வாதத்தையும் கேட்டறிந்த நீதிமன்றம், அவர் பணிபுரியும் மருத்துவ மையத்தின் அனுமதியின்றி, சட்டவிரோதமாக தகவல்களை எடுத்து தனது சொந்த நலனுக்காகப் பயன்படுத்தியது குற்றம் எனவும், அதற்காக மருத்துவருக்கு 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.