ADVERTISEMENT

UAE : இந்தியா செல்ல காத்திருந்த 4 வயது சிறுவனின் உடல்.. 75 கர்ப்பிணி பெண்கள்.. 531 பயணிகள் என கேரளா செல்லும் 3 விமானங்கள்..!!

Published: 16 May 2020, 11:06 AM |
Updated: 16 May 2020, 11:11 AM |
Posted By: jesmi

இந்தியாவின் மிகப்பெரிய திருப்பி அனுப்பும் நடவடிக்கையான “வந்தே பாரத்” திட்டத்தின் இரண்டாம் கட்ட திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் இன்று (மே 16) முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்த நடவடிக்கையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மூன்று விமானங்கள் இன்று கேரளா செல்லவிருக்கின்றன. இதில் நிறைமாத கர்ப்பிணி பெண்கள் 75 பேர் கேரளாவிலுள்ள கொச்சிக்கு செல்லும் ஒரே விமானத்தில் பயணிக்கின்றனர்.

ADVERTISEMENT

இது குறித்து இந்திய துணைத்தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் நீரஜ் அகர்வால் கூறுகையில், விமானத்தில் பயணிக்கும் கர்ப்பிணி பெண்களில் ஒருவருக்கு 9 மாதம் எனவும் மற்ற அனைத்து பெண்களும் 8 மாதம் முடிவடைந்த நிலையிலும் பயணிக்கின்றனர் என்று கூறியுள்ளார். மேலும், விமானத்தில் பயணிக்கும் அனைத்து கர்ப்பிணி பெண்களும் மகப்பேறுவின் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதால் ஏதேனும் அவசர நிலை ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அவர்களுடன் கூடவே இரண்டு மருத்துவர்களும் இரண்டு செவிலியர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்.

‘வந்தே பாரத் மிஷனின்’ இரண்டாம் கட்டம் மே 16 ஆம் தேதி (இன்று) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது, அடுத்தடுத்த நாட்களில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு 18 திருப்பி அனுப்பும் விமானங்கள் செல்லும் என்றும் கேரளாவுக்கு 13 விமானங்கள் செல்ல இருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


“கொச்சிக்கு செல்லும் விமானத்தில், கர்ப்பிணிப் பெண்களுடன் சேர்த்து மருத்துவ தேவையுடையவர்கள் 35 பேரும் பயணிக்கின்றனர். அவர்களில் 28 பேர் தீவிர மருத்துவ பிரச்சனையுடையவர்கள். இதில் புற்றுநோயின் கடைசி கட்டங்களில் ஒரு நோயாளி, மூளைக் கட்டி உள்ள ஒரு நோயாளி மற்றும் இரண்டு பயணிகளில் ஒருவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக செல்பவரும் (receiver) அவருக்கு சிறுநீரகத்தை வழங்கக்கூடிய கொடையாளியும் (Donor) செல்கின்றனர். மேலும், ரத்த புற்றுநோயால் இறந்த நான்கு வயது வைஷ்ணவ் கிருஷ்ணாதாஸின் உடலும் அந்த சிறுவனின் பெற்றோருடன் இன்று கேரளாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளன. இவர்களுடன் மனைவிகளை இழந்த இரண்டு பயணிகளும் விமானத்தில் இன்று கேரளாவிற்கு செல்லப்படுகின்றது” என்றும் மேலும் அவர் கூறினார்.


வந்தே பாரத் மிஷனின் முதல் கட்டமாக மொத்தம் 2,079 பயணிகள் துபாயில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளது. அதில் தொழிலாளர்கள் 760 பேர், சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள், பார்வையாளர்கள் மற்றும் மாணவர்கள் என மொத்தம் 438 பேர், மருத்துவ அவசர தேவையுடையவர்கள் 398 பேர், கர்ப்பிணிப் பெண்கள் 190 பேர், மூத்த குடிமக்கள் 126 பேர், மற்ற காரணங்களை உடையவர்கள் 167 பேர் என இந்தியாவிற்கு அமீரகத்திலிருந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT