உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் எண்ணற்ற தொழிலாளர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் சிறந்த வேலை வாய்ப்புகளையும் சிறந்த வாழ்க்கை தரத்தையும் உருவாக்குகிறது. அமீரகத்தில் வேலை செய்வதெற்கென வரும் தொழிலாளர்கள் அமீரகத்தின் வேலைக்கான விசாவினை பெற்று பணிபுரிந்து வருகின்றனர்.
இவ்வாறு, காலிப்பணியிடங்களில் வெளிநாட்டு திறமையாளர்களை அதிகளவில் பணியமர்த்துவதை மேம்படுத்துவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் ஐந்து வகையான வேலை விசாக்களை வழங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. இவற்றில் தனியார் துறை, அரசு துறைகள் மற்றும் இலவச மண்டலங்களில் (Free zone) பணிபுரியும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் நிலையான வேலை விசாக்கள் உட்பட நீண்ட கால குடியிருப்பு விசாக்களான (long-term residency visas) க்ரீன் விசா மற்றும் கோல்டன் விசா போன்றவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, ஃபுஜைரா மற்றும் உம் அல் குவைன் ஆகிய ஆறு எமிரேட்டுகளிலும் ஃபெடரல் ஆணையத்தின் ICP விசா வழங்கும் நிலையில், துபாய்க்கான ரெசிடன்சி விசாவானது பொது வெளிவிவகார இயக்குநரகத்தால் (General Directorate of Foreign Affairs – GDRFA) வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
நிறுவனத்தால் வழங்கப்படும் வேலை விசா:
அமீரகத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் உங்களுக்கு வேலை கிடைத்திருந்தால், அந்நிறுவனம் ஸ்பான்சர் செய்யப்பட்ட விசா மூலம் உங்களால் அமீரகத்திற்கு பயணிக்க முடியும், இந்த விசாவிற்கான கால வரையறை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை இருக்கக்கூடும். பின்னர் உங்கள் ஸ்பான்சரால் விசா மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும். மேலும், அமீரகத்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் வேலை வாய்ப்பு கடிதத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டவுடன், அந்நிறுவனம் வழங்கும் நுழைவு அனுமதியின் மூலம் உங்களால் நாட்டிற்குள் நுழைய முடியும்.
அதன் பிறகு, நாட்டிற்குள் நுழைந்தவுடன் உங்கள் முதலாளி விசா விண்ணப்ப செயல்முறையைத் தொடங்குவார். இதில் உங்கள் மருத்துவ உடற்தகுதி பரிசோதனை, எமிரேட்ஸ் ஐடிக்கான உங்கள் கைரேகை பயோமெட்ரிக் வழங்குதல் மற்றும் உங்களின் ரெசிடன்சி அனுமதி மற்றும் எமிரேட்ஸ் ஐடியை உங்களுக்கு வழங்குதல் போன்ற செயல்பாடுகள் அடங்கும். அதுமட்டுமின்றி, ஊழியரின் ரெசிடன்சி அனுமதிக்கு விண்ணப்பிப்பது மற்றும் ஆட்சேர்ப்பு மற்றும் விசா தொடர்பான செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வது முதலாளி அல்லது நிறுவனத்தின் பொறுப்பாகும்.
கிரீன் விசா:
கிரீன் விசா என்பது ஐந்தாண்டு ரெசிடென்சி அனுமதி விசா, இதற்கு ஸ்பான்சர் தேவையில்லை. அதேசமயம், இந்த விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தில் உள்ள முதல்-நிலை உறவினர்களுக்கு ஸ்பான்சர் செய்ய முடியும், மேலும் விசா ரத்து செய்யப்பட்டு காலாவதியான பிறகு ஆறு மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்படும். இருப்பினும், கிரீன் விசாவிற்கு திறமையான ஊழியர்கள், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்க வேண்டுமெனில், சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
திறமையான ஊழியர்கள்:
https://u.ae/ இன் படி, கிரீன் விசாவிற்கு விண்ணப்பிக்க, திறமையான ஊழியர்கள் பின்வரும் நான்கு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
- சரியான வேலை ஒப்பந்தம் வைத்திருக்க வேண்டும்.
- மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தின் (MOHRE) படி முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது தொழில் நிலைகளில் வகைப்படுத்தப்பட வேண்டும்.
- இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- ஒரு மாதத்திற்கு சுமார் 15,000 திர்ஹம்களுக்கு குறையாத சம்பளம் பெற வேண்டும்.
ஃப்ரீலான்ஸர்களுக்கான நிபந்தனை:
சுயதொழில் செய்பவர்கள் அல்லது ஃப்ரீலான்ஸர்கள் இந்த மூன்று தேவைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே கிரீன் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்:
- MOHRE (Ministry of Human Resources and Emiratisation) இலிருந்து ஃப்ரீலான்ஸர் அனுமதி.
- இளங்கலை பட்டம் அல்லது சிறப்பு டிப்ளமோ சான்று
- குறைந்தபட்சம் 360,000 திர்ஹம்கள் அல்லது கடந்த இரண்டு வருடங்களாக மற்ற நாட்டு நாணயத்தில் அதற்கு சமமான அளவில் வருமானச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
கோல்டன் விசா:
ஸ்பான்சர் இல்லாமல் பத்து வருடங்களுக்கு அமீரகத்தில் வசிக்கவும், வேலை செய்யவும் மற்றும் படிக்கவும் வேண்டும் என்பவர்களுக்கு ஏற்றதுதான் இந்த கோல்டன் விசா, இந்த விசாவிற்கு பெரும்பாலும் மருத்துவர்கள், செவிலியர்கள், சிறந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி பட்டதாரிகள், முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், விஞ்ஞானிகள் மற்றும் மனிதாபிமானப் பணியாளர்கள் போன்ற நபர்களே தகுதியுடையவர்கள்.
சமீபகாலமாக பல்வேறு திரையுலக பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். அதாவது பன்னாட்டு அளவில் திறமையாளர்களை ஈர்த்துக் கொள்வதே இதன் நோக்கம் ஆகும். அதுபோல, கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவி, குழந்தைகள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வரம்பின்றி நிதியுதவி செய்ய முடியும், மேலும் விசா புத்துப்பிக்கத்தக்கது ஆகும்.
ஃப்ரீலான்ஸ் விசா:
கிரீன் விசாவிற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை எனில், உங்களால் நிலையான ஃப்ரீலான்ஸ் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும், இது இரண்டு வருடங்கள் நாட்டிற்குள் உங்களை அனுமதிக்கும். அமீரகத்தில் ஃப்ரீலான்ஸராக ஆவதற்கு, உங்கள் குடும்ப உறுப்பினரால் வழங்கப்படும் குடும்ப விசா உங்களிடம் இல்லை எனில், உங்களிடம் ஃப்ரீலான்ஸ் வேலை அனுமதி மற்றும் ஃப்ரீலான்ஸ் விசா இருக்க வேண்டும்.
வீட்டு தொழிலாளர் விசா:
ஐந்தாவதாக, அமீரக அரசு வீட்டு உதவியாளர்களுக்கான விசாவையும் வழங்குகிறது. இதற்கு நிதியுதவி முதலாளியால் வழங்கப்படும். மேலும், வீட்டுப் பணியாளர்களுக்கான பெடரல் ஆணை-சட்டம் எண். 9-ன் படி, சரியான வீட்டுப் பணியாளர் உரிமம் இல்லையெனில், அமீரக குடியிருப்பாளர்கள் ஒரு வீட்டுப் பணியாளரை வேலைக்கு அமர்த்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.