ADVERTISEMENT

UAE: பூட்டிய பேருந்திற்குள் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளுக்கு தப்பிக்கச் சொல்லித் தரும் ஒர்க் ஷாப்..!!

Published: 1 Apr 2023, 9:05 PM |
Updated: 2 Apr 2023, 10:04 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் 6 முதல் 8 வயதுடைய குழந்தைகளில் பாதி பேருக்கு பள்ளிப் பேருந்துகளில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வதென்று தெரியவில்லை என்று ஷார்ஜா அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். சமீபத்தில் ஷார்ஜாவின் குழந்தைகள் பாதுகாப்புத் துறை (CSD) எமிரேட்டின் குடிமைத் தற்காப்பு ஆணையத்துடன் இணைந்து ஒரு பொதுப் பள்ளியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல ஆண் மற்றும் பெண் மாணவர்களைக் குறிவைத்து ஒரு சமூக பரிசோதனையை நடத்திய போது இது கண்டறியப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதாவது ஒவ்வொரு குழந்தையும் பூட்டிய பள்ளிப் பேருந்திற்குள் தனியே விடப்பட்டு, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணித்ததுடன் பேருந்தில் இருந்து வெற்றிகரமாக அவர்கள் வெளியேற முயற்சிக்கிறார்களா என்பதைப் பார்த்த போது, குழந்தைகளின் செயல்கள் இவற்றில் இருந்து வேறுபட்டு காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதாவது பரிசோதனையில் பங்கேற்ற குழந்தைகளில் பாதி பேர் மட்டுமே பேருந்தை விட்டு வெளியேற தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். எனவே, இதுபோன்ற சூழலில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளுக்கு வழிப்போக்கர்களின் கவனத்தை எவ்வாறு ஈர்ப்பது என்பது அவர்களுக்குத் தெரியாது, இது அவர்களை கடுமையான ஆபத்தில் ஆழ்த்தும் என்று ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பூட்டிய பேருந்திற்குள் உடனடி உதவியைப் பெற முடியாமல் போனால், ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக மூச்சுத் திணறல் மற்றும் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

ஆகையால், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த குழந்தைகளின் விழிப்புணர்வை அதிகரிக்க அடிப்படை பாதுகாப்பு திறன்களை மாணவர்களுக்கு கற்பிக்க கல்வி நிறுவனங்களில் ஒர்க் ஷாப்களை ஏற்பாடு செய்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ஆய்வில் கிடைக்கும் புள்ளிவிவரங்களை அதிகாரிகள் மற்றும் பெற்றோர்களுக்கு வழங்க இந்த பரிசோதனையை மேற்கொண்டதாக CSD இன் இயக்குனர் Hanadi Al Yafei கூறியுள்ளார்.

குழந்தைகளுக்கு கற்பித்தல்:

இவ்வாறான சூழ்நிலையை எதிர்கொள்ள, குழந்தைகளை பேருந்து அல்லது பூட்டிய வாகனத்திற்குள் விட்டுச் சென்றால் அவர்கள் எடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஷார்ஜா சிவில் டிஃபென்ஸ் ஒரு விழிப்புணர்வு ஒர்க் ஷாப்பை நடத்தி அவர்களுக்கு கற்பித்துள்ளது. அதன்படி, முதலில் காற்றோட்டத்திற்காக ஜன்னல்களைத் திறப்பதில் இருந்து வெளியே இருப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஹார்னை மீண்டும் மீண்டும் ஒலிப்பது வரை இந்த ஒர்க் ஷாப்களில் கற்பிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் ‘School Bus Safety Golden Rules’ என்பதன் கீழ் இரண்டு நாள் ஒர்க் ஷாப் நடத்தப்பட்டது, இதில் 900 பேருந்து ஓட்டுநர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் நேவிகேட்டர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும், இது குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் சமூக ஊடகங்களில் CSD பகிர்ந்துள்ளது. அந்த வீடியோ காட்சிகளில் வாகனங்களுக்குள் குழந்தைகளை கவனிக்காமல் விட்டுச் செல்வதால் ஏற்படும் ஆபத்தையும், குழந்தைகளைப் பாதுகாப்பதில் பல்வேறு பங்குதாரர்களுக்கும் பெற்றோருக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் பற்றி அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.