அபுதாபியில் அங்கீகரிக்கப்படாத உணவகங்கள் மற்றும் கடைகளில் இருந்து உணவு பொருட்களை வாங்க வேண்டாம் என குடியிருப்பாளர்களை அபுதாபி விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் (Adafsa) அறிவுறுத்தியுள்ளது. ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு அபுதாபி, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ராவின் பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பானவை என்பதை உறுதிப் படுத்த தொழிற்சாலைகள் மற்றும் பிரபலமான சமையலறைகளில் ஆணையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
பெரும்பாலும் ஈத் போன்ற பண்டிகைக் காலங்களில் பேக்கரிகள் மற்றும் உணவகங்கள் அதிகளவிலான வாடிக்கையாளர்களைக் கையாளும். எனவே, உணவு சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் தரங்களுடன் நிறுவனங்கள் செயல்படுவதைக் கண்காணிக்க அதிக கள ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆய்வாளர்கள் சோதனையின் போது உணவு நிறுவனங்களில் சுகாதாரம், தயாரித்தல், சேமித்தல் மற்றும் போக்குவரத்து செயல்முறைகளின் போது, சிறந்த நடைமுறைகள் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்கின்றனர்.
இந்நிலையில், ஏதேனும் உணவு நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகளில் சுகாதாரமற்ற உணவு அல்லது முறையற்ற சமையல் போன்றவற்றை கண்டால் உடனடியாக 800555 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விரைவாகப் புகாரளிக்குமாறு உள்ளூர் அதிகாரசபை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.