ADVERTISEMENT

UAE: விரைவில் முடியவிருக்கும் ஊழியர்களுக்கான காலக்கெடு..!! திட்டத்தில் இணங்காதவர்களுக்கு கடும் அபராதம் என எச்சரிக்கை….!!

Published: 4 May 2023, 6:12 PM |
Updated: 4 May 2023, 7:39 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலையின்மை காப்பீட்டுத் திட்டத்தை இந்த ஆண்டு ஜனவரி 1 ம் தேதி முதல் அமீரக அரசு கட்டாயமாக்கியது. மேலும் இந்த திட்டத்தில் இணைவதற்கு காலக்கெடுவையும் நிர்ணயித்து, காப்பீட்டு திட்டத்தில் இணையாத ஊழியர்கள் மீது ஜூலை மாதம் 1 ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் எனவும் அமீரக அரசு தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் அமீரகத்தில் குறிப்பிட்ட சில காரணங்களால் வேலை இழந்த குடியிருப்பாளர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கும் இந்த வேலையின்மை காப்பீட்டு சந்தாவுக்கான சலுகை காலம் விரைவில் முடிவடைய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைய எதிர்வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தில் இணையாத ஊழியர்கள் அபராதம் செலுத்த நேரிடும் என தற்பொழுது மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளது.

அமீரகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை-சட்ட எண். 13 இன் கீழ், பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து ஊழியர்களும் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.

ADVERTISEMENT

அதிகாரப்பூர்வமாக தன்னார்வ வேலை இழப்பு (Involuntary Loss of Employment – ILOE) காப்பீடு என்றழைக்கப்படும் இந்த திட்டம், ஒழுங்கு நடவடிக்கை அல்லது ராஜினாமா தவிர வேறு காரணங்களால் வேலை இழப்பவர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்க முற்படுகிறது.

இந்நிலையில், ஜூன் 30 காலக்கெடுவிற்குப் பிறகும் இத்திட்டத்தில் சேராதவர்கள் உட்பட சட்டத்திற்கு இணங்கத் தவறியவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, செலுத்தப்படாத அபராதங்கள் ஊழியர்களின் சம்பளம் அல்லது சேவையின் இறுதிப் பலன்களில் இருந்து கழிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வேலையிழப்பு காப்பீடு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று தண்டனைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

  1. ஜூன் 30, 2023க்கு முன் திட்டத்தில் சேரத் தவறிய ஊழியர்களுக்கு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.
  2. நிலுவைத் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு மேல் பிரீமியத்தைச் செலுத்தத் தவறினால் 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படுவதுடன் காப்பீட்டு சான்றிதழை ரத்து செய்ய வழிவகுக்கும்.
  3. வேலையின்மை காப்பீட்டுப் பலன்களைப் பெறுவதற்காக காப்பீட்டாளருடன் கூட்டுச் சேர்ந்து பிடிபடும் முதலாளிகளுக்கு ஒவ்வொரு வழக்கிற்கும் 20,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

காப்பீட்டின் நன்மைகள்:

>> அமீரகத்தில் வேலையிழப்பு காப்பீட்டின் கீழ் பதிவு செய்த ஊழியர்கள் வேலையை இழக்கும் போது, அவர்களின் சராசரி அடிப்படை சம்பளத்தில் 60 சதவீதம் வரை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பெற்றுக் கொள்ளலாம்.

>> ஆனால், காப்பீட்டை க்ளெய்ம் செய்ய, ஒரு ஊழியர் குறைந்தபட்சம் 12 மாதங்கள் தொடர்ந்து பிரீமியத்தைச் செலுத்தியிருக்க வேண்டும். அதேவேளை, வேலை இழப்புக்கான சான்று 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும் பிற நிபந்தனைகளும் உண்டு.

செலவு:

காப்பீட்டில் உள்ள கொள்கைகளின்படி, 16,000 திர்ஹம் மற்றும் அதற்கும் குறைவான அடிப்படை சம்பளம் பெறுபவர்கள் ஒவ்வொரு வருடமும் 63 திர்ஹம் (VAT உட்பட) காப்பீட்டுக்காக செலுத்துவார்கள்; அதுபோல, 16,000 திர்ஹம்களுக்கு மேல் பெறுபவர்கள் ஒரு வருடத்திற்கு 126 திர்ஹம்களுக்கு சந்தா செலுத்தலாம்.

எனவே, ஊழியர்கள் ILOE போர்டல் (https://www.diniloe.ae/nsure/login/#/) அல்லது அதன் அதிகாரப்பூர்வ செயலி மூலம் இதில் சேரலாம். சந்தா தொகையை பரிமாற்ற மையங்கள், வணிக மையங்கள், கியோஸ்க்குகள், வங்கி பயன்பாடுகள், ATM இயந்திரங்கள் மற்றும் பிற கட்டண கியோஸ்க்குகள் மூலமாகவும் செலுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.